என்னுடைய வளர்ச்சிக்கு விராட் கோலி தான் காரணம்.. அவர் சொன்ன ஒரு வார்த்தை தான்.. ரஜத் பட்டிதார்
மும்பை: ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதற்கு விராட் கோலி தனக்கு அளித்த அசைக்க முடியாத ஆதரவே பெரும் நம்பிக்கையை தந்தது என்று நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். தனது ரோல் மாடலாக கருதும் ஒருவரிடமிருந்து கிடைக்கும் ஆதரவு, மற்ற அனைத்தையும் விட உயர்வானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஃப் டு பிளெசிஸுக்குப் பிறகு ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனைகள் நடந்தபோது, நிர்வாகம் விராட் கோலியிடம் ரஜத் பட்டிதாரின் பெயரைப் பரிந்துரைத்தது. அதற்கு கோலி முழு ஆதரவு அளித்தார். பட்டிதாரின் பேட்டிங் திறமை மட்டுமின்றி, ஆட்டத்தின் போது அவரிடம் கோலி கவனித்த தலைமைத்துவப் பண்புகளும் இந்த நம்பிக்கைக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

ரஜத் பட்டிதாரின் தலைமையில் ஆர்சிபி அணி 2025 ஆம் ஆண்டில் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதுடன், 2026 ஆம் ஆண்டிலும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து சாதனை படைத்தது. இது குறித்து பேசிய அவர், "உங்கள் ரோல்மாடல் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, உங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. வேறு யாருடைய ஆதரவும் உங்களுக்குத் தேவைப்படாது."
"விராட் கோலி பேட்டிங் செய்யும் போது மைதானத்தில் அவர் செய்யும் விஷயங்கள் முதல், மைதானத்திற்கு வெளியே அவரது தினசரி வழக்கங்கள் வரை அனைத்தையும் நான் உன்னிப்பாகக் கவனிப்பேன். கேப்டன்ஷிப் விஷயத்திலும் அவர் எனக்குப் பக்கபலமாக இருந்தார் என்பதைப் பின்னர் நான் தெரிந்து கொண்டேன்."
"ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் ஆதிக்கத்தையும் கருத்தில் கொள்ளும்போது, ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல" என்றும் படிதார் கூறினார்.
விராட் கோலி தற்போது அதிகாரப்பூர்வமாக கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும், அணியின் அடுத்த கேப்டனைத் தேர்ந்தெடுப்பதில் அவரது செல்வாக்கு மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. பல ஆண்டுகளாகத் தான் வியந்து பார்த்த ஒரு வீரரே தனது வளர்ச்சிக்கு ஆதரவாக நின்றது பட்டிதாருக்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆர்சிபி காத்துக் கிடந்த ஐபிஎல் கோப்பைக் கனவை, கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே நனவாக்கி கோலியின் நம்பிக்கையைக் காப்பாற்றினார் ரஜத் பட்டிதார்.


Click it and Unblock the Notifications


