மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியை சுவாரஸ்யமாக கண்டுகளித்து வந்த ரசிகர்களுக்கு திடீர் சர்ஃப்ரைஸை கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முழு நேர கேப்டன் ரோகித் சர்மா தனது உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டதால், முதல் போட்டியில் மட்டும் விலகியுள்ளார். இதனால் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் கேப்டன்சி பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா, இன்று முதன் முறையாக 50 ஓவர் கேப்டனாக பொறுப்பேற்றார். முதல் போட்டியிலேயே பவுலர்களை சரியாக ரொட்டேட் செய்ததால் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 129 ரன்களுக்கு 3 விக்கெட்கள் என இருந்த ஸ்கோர் 188 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 35.4 ஓவர்களுக்குள் முதல் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியோ யாருமே எதிர்பார்க்காத வகையில் தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்களை இழந்து விட்டது. தொடக்க வீரர்கள் இஷான் கிஷான் 3, சுப்மன் கில் 20, விராட் கோலி 4, சூர்யகுமார் யாதவ் 0 என அடுத்தடுத்து சரிந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் 25 ரன்களை மட்டுமே வெளியேறியதால் 83 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி திணறியது.
இந்நிலையில் கவலையில் ஆழ்ந்திருந்த இந்திய ரசிகர்களுக்கு திடீர் சர்ஃப்ரைஸ் கொடுத்து அசத்தினார் நடிகர் ரஜினிகாந்த். தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியை காண வான்கடே மைதானத்திற்கு சென்றார். அங்கு மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரிய தலைவர் அமோல் கேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ரஜினிகாந்த் ஸ்டைலாக அமர்ந்து வேடிக்கை பார்த்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.