கேப் டவுன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கேஷவ் மகாராஜ், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்துக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. குழந்தை ராமரின் சிலை அன்று நிறுவப்பட உள்ள நிலையில் இந்தியா முழுவதிலும் அதற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது மத்தியில் ஆளும் பாஜக அரசின் பெரிய சாதனையாக முன்னிலைப்படுத்தப்படும் நிலையில் வெளிநாடுகளிலும் இந்த செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், பூர்வீக இந்தியரான கேஷவ் மகாராஜ் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வாழ்த்து கூறி இருக்கிறார். அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதோடு தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும் இந்தியா வரும் போதெல்லாம் கோவில்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும், அனுமன் பக்தராக தன்னை காட்டிக் கொள்பவர்.
இந்த நிலையில் கேஷவ் மகாராஜ் தனது வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் வணக்கம். மகேஷ் (தென்னாப்பிரிக்காவிற்கான இந்திய தூதரக அதிகாரி), இந்து சமூகம் மற்றும் தென்னாப்பிரிக்கா என அனைவருக்கும் நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வாழ்த்துக்கள். அதன் மூலம் அமைதி, ஆன்மீக ஒளி அனைவருக்கும் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்" எனக் கூறி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது கேஷவ் மகராஜ் பேட்டிங் செய்ய வரும் போது "ராம் சியா ராம்" என்ற ராமரை குறிக்கும் சினிமா பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது. அது அப்போது இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆனது குறிப்பிடத்தக்கது.