
ஒயிட் வாஷ் தோல்வி
பிர்மிங்கமில் நடைபெற்ற இப்போட்டியில், எப்படியாவது ஆறுதல் வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசம் நேர்த்தியாக விளையாடி, 139 பந்துகளில் 158 ரன்கள் எடுத்தார். இதில், 14 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல், இமாம்-உல்-ஹக் 56 ரன்களும், ரிஸ்வான் 74 ரன்களும் எடுத்து பாபருக்கு பக்கபலமாக இருந்தனர். இதையடுத்து, 332 ரன்களை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்களும், லெவிஸ் 77 ரன்களும் குவிக்க, 48வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றிப் பெற்றது. ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி என இவரது பவுலிங்கும் பெரிதாக எடுபடவில்லை. இதன் மூலம், 3 போட்டிகளையும் வென்று 3-0 என்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி

அதுமட்டுமே ஆறுதல்
எனினும், ஒரேயொரு ஆறுதலாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதாவது, குறைந்த ஒருநாள் போட்டிகளில் 14 சதம் விளாசிய என்ற பேட்ஸ்மேன் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். 26 வயதான பாபர் 81 போட்டிகளில் 14 சதங்களை அடித்திருக்கிறார். ஹசிம் ஆம்லா 84 போட்டிகளிலும், டேவிட் வார்னர் 98 போட்டிகளிலும், விராட் கோலி 103 போட்டிகளிலும் 14 சதங்களை நிறைவு செய்திருந்தனர்.

சிதைந்து போன அணி
இந்நிலையில், பாகிஸ்தான் தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா கூறுகையில், "பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கும் அதன் ரசிகர்களுக்கும் மிகவும் வேதனையான மற்றும் கடினமான நாள். இந்த அணி பி-கிரேடு இங்கிலாந்து அணியால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவினால் எனக்கு ஆச்சரியமில்லை. இந்த அணி மனரீதியாக சிதைந்துவிட்டது. முதல் ஒருநாள் போட்டியில் பெற்ற தோல்வியின் அதிர்ச்சியை இருந்து அவர்களால் மீள முடியவில்லை. அந்த தோல்விக்கு பிறகு அவர்கள் அழுத்தத்திற்கு ஆளானார்கள். எனவே தவறுகளைச் செய்தார்கள். இந்த பாகிஸ்தான் அணிக்கு இது ஒரு வாடிக்கையாக மாறிவிட்டது. தவறுகளிலிருந்து எதுவும் கற்றுக்கொள்ளாமல், மாறாக, அவர்கள் அந்த பிரஷரை இரட்டிப்பாக்குகிறார்கள்.

150 ரன்கள் மட்டும் போதாது
பாபர் அசம் ஒரு இளம் கேப்டன். அவர் தான் அணியின் சூழலை மாற்ற வேண்டும். 150 ரன்கள் அடித்ததற்காக தலைப்புச் செய்திகளில் பெறமாட்டார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அணி ஒற்றுமையாக விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே அது நடக்கும். நீங்கள் வாய்ப்புகளை எடுத்துக் கொள்ளாவிட்டால், நீங்கள் எவ்வாறு வெற்றிகரமான அணியாக மாறுவீர்கள்?

கடுமையான சூழல்
"நீங்கள் ஜிம்பாப்வே தொடரைப் பார்த்தீர்களா?. இளைஞர்களை விளையாட வைக்க அது ஒரு சிறந்த தொடராகும். ஆனால் அது நடக்கவில்லை. அதே பழைய வீரர்கள் அங்கு விளையாடினர். இதை பாபர் மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தான் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். ஒரு கேப்டன் டிரஸ்ஸிங் ரூமில் அணியின் சூழலை எவ்வாறு மாற்றுகிறார் மற்றும் அவரது அணியில் உள்ள திறமையை எவ்வாறு சோதிக்கிறார் என்பதைப் பொறுத்தே பாபரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்" என்று லெந்த்தாக விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications