226 ரன்.. 37 ஃபோர், 1 சிக்ஸ்.. வைபவ் சூர்யவன்ஷியை வேடிக்கை பார்க்கவிட்டு அடித்த ஆயுஷ் லோஹருகா
பாட்னா: ரஞ்சி டிராபி தொடரின் முதல் போட்டியிலேயே, அனைவரின் பார்வையும் 14 வயது இளம் துணை கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி மீதுதான் இருந்தது. ஆனால், அவர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, "நான் இருக்கிறேன் பார்!" என்று களமிறங்கிய சக பீகார் அணி வீரர் ஆயுஷ் லோஹருகா, அருணாச்சலப் பிரதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
பாட்னாவில் உள்ள மொயின்-உல்-ஹக் மைதானத்தில், பீகார் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் அணிகளுக்கு இடையே ரஞ்சி டிராபி போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில், பீகார் அணியின் துணை கேப்டனாக அறிமுகமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தை முதல் ஓவரிலேயே காட்டினார். வெறும் 5 பந்துகளைச் சந்தித்த அவர், 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 14 ரன்கள் குவித்து, 280 என்ற ஸ்டிரைக் ரேட்டில் மிரட்டினார். ஆனால், அந்த ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறியது, அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
லோஹருகாவின் ருத்ரதாண்டவம்!
வைபவ் ஆட்டமிழந்த பிறகு, 3-வது வீரராகக் களமிறங்கிய 22 வயது ஆயுஷ் லோஹருகா, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். வைபவ் விட்டுச் சென்ற ஆட்டத்தை தன் கையில் எடுத்தார். அருணாச்சலப் பிரதேச பந்துவீச்சாளர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், தனது நேர்த்தியான ஷாட்களால் ரன் மழை பொழிந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் காலைப் பொழுதிலேயே, அவர் தனது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்து, ஒட்டுமொத்த மைதானத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 247 பந்துகளைச் சந்தித்த அவர், 37 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 226 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பிரம்மாண்டமான பார்ட்னர்ஷிப்கள்
லோஹருகா, தனது இரட்டை சதப் பயணத்தில், மூன்று பிரம்மாண்டமான பார்ட்னர்ஷிப்களை அமைத்து, பீகார் அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்:
- 2-வது விக்கெட்: அர்னவ் கிஷோருடன் (52) இணைந்து 152 ரன்கள்.
- 3-வது விக்கெட்: கேப்டன் சகிபுல் கனியுடன் (59) இணைந்து 136 ரன்கள்.
- 4-வது விக்கெட்: விக்கெட் கீப்பர் பிபின் சௌரப்புடன் (52) இணைந்து 104 ரன்கள்.
அவரது இந்த ஆட்டத்தால், பீகார் அணி 88 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் குவித்து, 325 ரன்கள் என்ற இமாலய முன்னிலையைப் பெற்றுள்ளது.
பிற போட்டிகளின் சுருக்கம்
முன்னதாக, போட்டியின் முதல் நாளில், பீகார் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சகிப் ஹுசைன், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, அருணாச்சலப் பிரதேச அணியை வெறும் 105 ரன்களுக்குச் சுருட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு ரஞ்சி டிராபி போட்டியில், மும்பை அணியின் புதிய கேப்டன் ஷர்துல் தாக்கூர், ஜம்மு & காஷ்மீர் அணிக்கு எதிராக 12 பந்துகளைச் சந்தித்து, ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி ஏமாற்றமளித்தார்.


Click it and Unblock the Notifications