சிங்கம் டா.. ரோஹித் முன்னிலையில் கர்ஜித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. கெத்து காட்டிய ஷர்துல்
மும்பை: 2024 - 25 ரஞ்சி டிராபி தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா உள்ளிட்ட அனுபவ பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், சதம் அடித்து மும்பை அணியை மீட்டார் ஷர்துல் தாக்குர். கடந்த ஆண்டு இந்திய அணியில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ரஞ்சி டிராபியில் எட்டாம் வரிசையில் இறங்கி அணியை மீட்டார் ஷர்துல் தாக்குர்.
ரஞ்சி டிராபி தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 120 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், ரஹானே, சிவம் துபே உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் மோசமாக சொதப்பினர். ரோஹித் 3 ரன் மட்டுமே எடுத்து இருந்தார். ஆனால், அப்போது எட்டாம் வரிசையில் இறங்கிய ஷர்துல் தாக்குர் அரை சதம் அடித்து இருந்தார்.

முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 120 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அதில் ஷர்துல் தாக்குர் 51 ரன்களை எடுத்திருந்தார். அதுவும் 57 பந்துகளில் அந்த ஸ்கோரை அவர் எடுத்து இருந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோஹித் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மும்பை அணி அப்போது 101 ரன்கள் 7 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. பின்னர் எட்டாம் வரிசையில் இறங்கிய ஷர்துல் தாக்குர் அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்து மும்பை அணியை சரிவிலிருந்து மீட்டார். சதம் அடித்த பின் தனக்கு இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரில் எந்த அணியும் தன்னை வாங்காததையும் சுட்டிக் காட்டும் வகையில் கர்ஜித்து, தன் நெஞ்சில் அடித்து சதத்தை கொண்டாடினார்.
ஒன்பதாம் வரிசையில் இறங்கிய தனுஷ் கோட்டியான் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடி அரை சதம் அடித்தார். இவர்கள் இருவரும் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஷர்துல் தாக்கூர் 119 பந்துகளில் 113 ரன்களையும், தனுஷ் கோட்டியான் 58 ரன்களையும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து இருக்கிறது. மேலும் 188 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.


Click it and Unblock the Notifications