இந்த சாதனையை செய்தாலே இந்திய அணியில் இடம் உறுதி.. சர்ஃபராஸ் கான் தம்பிக்கு அடித்த லக்
மும்பை : 19 வயதே ஆன முஷீர் கானுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விரைவில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்ற சர்ஃபராஸ் கானின் இளைய சகோதரர் ஆவார்.
முஷீர் கான் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பெற்றார். அந்த தொடரில் 360 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். அதன் பின் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக ஆடினார் முஷீர் கான்.

ரஞ்சி தொடரின் காலிறுதிப் போட்டியில் இரட்டை சதம் அடித்து முதல் தர போட்டிகளில் தனது முதல் சதம் மற்றும் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அடுத்து ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக 326 பந்துகளில் 136 ரன்கள் சேர்த்தார். நிதானமாக ஆடி சதம் அடித்ததால் இறுதிப் போட்டியில் மும்பை அணி இமாலய வெற்றியை பெற்றது.
அதே இறுதிப் போட்டியில் முஷீர் கான் பந்துவீச்சிலும் கை கொடுத்தார். இரண்டு விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதை அடுத்து இறுதிப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை செய்தார் முஷீர் கான்.
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இளம் வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஜாகிர் கான் ஆகியோரை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் முஷீர் கான். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த மூவரும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றதால் அடுத்த ஓராண்டுக்குள் இந்திய அணியில் இடம் பெற்றனர்.
தற்போது முஷீர் கான் அவர்களை முந்தி அந்த சாதனையை செய்து இருக்கும் நிலையில் அவருக்கும் விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இளம் வீரர்கள் பட்டியல் -
முஷீர் கான் - 19 ஆண்டுகள், 16 நாட்கள் (மும்பை vs விதர்பா, 2024)
ஷ்ரேயாஸ் ஐயர் - 21 ஆண்டுகள், 83 நாட்கள் (மும்பை vs சவுராஷ்டிரா, 2016)
கேஎல் ராகுல் - 21 ஆண்டுகள், 291 நாட்கள் (கர்நாடகா vs மகாராஷ்டிரா, 2014)
ஜாகீர் கான் - 22 ஆண்டுகள், 198 நாட்கள் (பரோடா vs ரயில்வே, 2001)


Click it and Unblock the Notifications