என்னையா டீமில் இருந்து தூக்குறீங்க.. இப்ப பதில் சொல்லுங்க.. ஸ்ரேயாஸ் ஐயர் வைத்த ட்விஸ்ட்
மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்ட நிலையில், அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை எனக் கூறி அவரது பிசிசிஐ ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று மும்பை அணி சார்பில் ஆடி வருகிறார். ரஞ்சி கோப்பை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அவர் ஆடினார். அரை இறுதிப் போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து அவரை அணியில் இருந்து நீக்கியது சரியே என ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் பேசி வந்தனர்.

இந்த நிலையில், ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸிலும் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது இன்னிங்ஸில் பொங்கி எழுந்தார். மற்ற மும்பை வீரர்கள் நிதான ஆட்டம் ஆடி ரன் சேர்த்து வந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டம் ஆடினார். 111 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் நிதானமாக ஆடி இருந்தால் சதம் அடித்து இருக்கலாம். எனினும், அவர் தன்னை அணியில் இருந்து நீக்கியதற்கு பதிலடி கொடுக்க நினைத்த அவர் அதிரடி ஆட்டம் ஆடி அதை செய்து முடித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்தால் டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என இந்திய அணி நிர்வாகம் தெரிவித்து இருக்கும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த ஜூலை மாதம் இந்திய அணி ஆட உள்ள டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதே ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணியின் இளம் வீரர் முஷீர் கான் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 326 பந்துகளில் 136 ரன்கள் சேர்த்தார். இவர் சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆன சர்ஃபராஸ் கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications