மும்பை : 90 ஆண்டு ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத ஒரு சாதனையை 37 வயது வீரரான ஜலாஜ் சக்சேனா படைத்திருக்கிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் பல வீரர்கள் பல சாதனைகள் செய்தும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று போராடி ஒரு போட்டியில் கூட விளையாட முடியாத வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.
அந்த வகையில் ரஞ்சி கிரிக்கெட்டில் முதல்முறையாக 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி 20 வருடமாக விளையாடி வரும் ஜலாஜ் சக்சேனா என்ற வீரர் ஒரு மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் முதலில் மத்திய பிரதேச அணிக்காக 2005 முதல் 2016 ஆம் ஆண்டு வரை விளையாடிய சக்சேனா பின்னர் கேரள அணிக்காக ரஞ்சித் தொடரில் விளையாடுகிறார்.

ஐபிஎல் தொடரில் 2013 மற்றும் 14 ஆம் ஆண்டு மும்பை அணியிலும் 2015 ஆம் ஆண்டு ஆர் சி பி அணியிலும் ஜலாஜ் சக்சேனா இடம்பெற்றிருந்தாலும் ஒருமுறை கூட ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை. எனினும் 2014 சாம்பியன்ஸ் லீக் தொடரில் மும்பை அணிக்காக மூன்று போட்டிகளில் ஜலால் சக்சேனா விளையாடி இருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு டெல்லி அணி இவரை வாங்கியும் பெஞ்சில் அமர வைத்திருந்தது. இதேபோன்று 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி ஜலாஜ் சக்சேனாவை வாங்கி ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் கடைசியாக ஐபிஎல் தொடரில் ஒரு ஆட்டத்தில் ஆவது சக்சேனா விளையாடி இருக்கிறார். எனினும் ரஞ்சி கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலுமே ஜலாஜ் சக்சேனா கலக்குவார்.
37 வயதான ஜலாஜ் சக்சேனா இன்று உத்தர பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் 6 ஆயிரம் ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை ஜலாஜ் சக்சேனா படைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் 900 ரன்கள் பந்துவீச்சு 400 விக்கெட் எடுத்தார். தற்போது ரஞ்சி தொடரில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்த நபர் பட்டியலில் ஜலால் சக்சேனா முதலிடத்திலும், அடுத்தபடியாக சுனில் ஜோசி 4116 ரன்கள் எடுத்து 2வது இடத்திலும் உள்ளார்.