இனிமே ஃபார்முக்கு வந்தா என்ன.. வரலைனா என்ன.. 3 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பை: மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கிய நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வழியாக 3 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசி ஃபார்மை நிரூபித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ந்த போது, அவரை ரஞ்சி டிராபி தொடரில் விளையாட அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவரோ தேவையில்லானல் பிசிசிஐ நிர்வாகிகளை பகைத்து கொண்டார்.

இதனால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட, பின்னர் இலங்கை ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போதும் ஸ்ரேயாஸ் ஐயர் சொதப்ப, துலீப் டிராபி தொடரில் விளையாட பணிக்கப்பட்டார். அதில் சில அரைசதங்கள் அடித்தாலும், இந்திய அணிக்கு திரும்பும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நிரந்தரமாகவே நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி தொடரில் விளையாட தொடங்கினார். அதில் முதல் போட்டியில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணி வெறும் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன்பின் களமிறங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மாத்ரே 176 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 142 ரன்களும் விளாசினர். இது முதல்தர கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கும் 14வது சதமாகும். அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கும் முதல் சதமாகும். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்முக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தை இந்திய அணியில் விளையாடி வரும் சர்ஃபராஸ் கான் சிறப்பாக பிடித்து கொண்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 150 ரன்கள் விளாசியதன் மூலமாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications