டெல்லி : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற தமிழ்நாடு அணி கடுமையாக போராடி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி டெல்லியை கடந்த 18ஆம் தேதி எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தமிழக அணியில் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இரட்டை சதம் விளாசினார். இதேபோன்று வாஷிங்டன் சுந்தர் 152 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் 117 ரன்களும் சித்தார்த் 66 ரன்களும் எடுக்க தமிழ்நாடு அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 674 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் கடுமையாக தடுமாறியது. அந்த அணியின் இளம் நட்சத்திர வீரரும் முன்னாள் அண்டர் 19 கேப்டனுமான யாஷ் தயால் மட்டும் போராடி சதம் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 266 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து 408 ரன்கள் பின்தங்கிய டெல்லி அணிக்கு தமிழ்நாடு அணி பாலோவ் ஆன் விதித்தது. இதனை அடுத்து டெல்லி அணி மீண்டும் 2வது முறையாக பேட்டிங் செய்தது. இதில் டெல்லி அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுக்க தமிழக அணி கடுமையாக போராடியது. தொடக்க வீரர் சனத் சங்வான் நிதானமாக விளையாடி 231 பந்துகள் எதிர் கொண்டு 83 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹிம்மத் சிங் 36 ரன்கள் எடுத்தார்.
ஒரு கட்டத்தில் தமிழக அணி 180 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியது. ஆனால் ஓவர்கள் குறைவாக இருந்ததால், தமிழ்நாடு அணியால் எஞ்சிய இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. எனினும் முதலில் அதிக ரன்கள் முன்னிலை பெற்றதை வைத்து தமிழக அணி அதிக புள்ளிகள் பெற்றது.
எனினும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு தமிழ்நாடு அணிக்கு இருந்தும் கடைசி இரண்டு விக்கெட் எடுக்கப் போதிய ஓவர்கள் இல்லாததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. பேட்டிங்கில் 152 ரன்கள், முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயன் விருதை தட்டி சென்றார். தற்போது வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் தேர்வாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.