100 50+ ஸ்கோர்.. 41 வது சதம்.. தெறிக்கவிட்ட ரஹானே.. கால் இறுதிப் போட்டியில் ஹரியானா திணறல்
கொல்கத்தா: 2025 ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் ஹரியானா அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே சதம் அடித்துள்ளார். இது முதல் தர போட்டிகளில் அவரது 100வது 50+ ஸ்கோர் ஆகவும், 41வது சதமாகவும் அமைந்தது.
அஜிங்க்யா ரஹானேவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரில் ரஹானே அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமான கால் இறுதிப் போட்டியில் சதம் அடித்து மும்பை அணி ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணமாக இருந்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 315 ரன்கள் எடுத்தது. ஷாம்ஸ் முலானி 91 ரன்களும், ஒன்பதாம் வரிசையில் இறங்கிய தனுஷ் கோட்டியான் 97 ரன்களும் எடுத்திருந்தனர். முதல் இன்னிங்ஸில் ரஹானே உட்பட மும்பை அணியின் அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்காமல் சொதப்பி இருந்தனர்.
அடுத்து ஆடிய ஹரியானா அணி முதல் இன்னிங்ஸில் 301 ரன்கள் எடுத்தது. அபாரமாக பந்துவீசிய மும்பை பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் ஹரியானாவின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி 14 ரன்கள் முன்னிலை பெற காரணமாக இருந்தார்.
அடுத்து மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அப்போது கேப்டன் ரஹானே சிறப்பாக விளையாடி 160 பந்துகளில் சதம் அடித்தார். அவர் 180 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 86 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே 65 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 339 ரன்கள் எடுத்தது. ஹரியானா அணிக்கு வெற்றி இலக்காக 354 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஹரியானா அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் கால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது மும்பை அணி.


Click it and Unblock the Notifications