கோலியுடன் ஆடும் வாய்ப்பு போச்சு ஆனா விடமாட்டேன்.. அறிமுக போட்டியில் வரலாறு படைத்த ஆயுஷ் டோசேஜா
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் ஆயுஷ் டோசேஜா. எட்டு மாதங்களுக்கு முன்பு, 'கிங்' விராட் கோலியுடன் ஒரே அணியில் ரஞ்சி டிராபி போட்டியில் அறிமுகமாகும் கனவுடன் இருந்தார். ஆனால், போட்டிக்கு முந்தைய நாள் ஏற்பட்ட காயத்தால் கைநழுவிப் போனது. ஆனால், அந்த வலியை மனதிற்குள் உத்வேகமாக மாற்றி, தனது முதல் ரஞ்சி டிராபி போட்டியிலேயே இரட்டை சதம் விளாசி, சரித்திரத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார் ஆயுஷ் டோசேஜா.
விராட் கோலியுடன் ஒன்றாக விளையாட கிடைத்த வாய்ப்பு கடைசி நேரத்தில் நழுவியதால் ஏமாற்றத்தில் இருந்த ஆயுஷ் டோசேஜா, அதில் இருந்து மீண்டு வந்து தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கினார். இந்த முறை, அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 279 பந்துகளைச் சந்தித்து 209 ரன்கள் குவித்து, தனது அறிமுகத்தையே ஒரு காவியமாக மாற்றினார்.
அவருடன் சனத் சங்வான் ஜோடி சேர்ந்து, நான்காவது விக்கெட்டுக்கு 319 ரன்கள் என்ற பிரம்மாண்டமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இவர்களின் அபாரமான ஆட்டத்தால், டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரைக் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

தனது இந்த இரட்டை சதம் குறித்துப் பேசிய டோசேஜா, "விராட் சாருடன் விளையாடும் வாய்ப்பை இழந்த வலியின் தீவிரத்தை, இந்த ரஞ்சி அறிமுக இரட்டை சதம் குறைத்துள்ளது" என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.
எட்டு மாதங்களுக்கு முன்பு, டெல்லி ரஞ்சி டிராபி அணியில் விராட் கோலி இடம்பெற்றிருந்தார். அந்தப் போட்டிக்கான அணியில், இளம் வீரர் ஆயுஷ் டோசேஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கிரிக்கெட் ஆதர்ச நாயகன் விராட் கோலியுடன் ஒரே ஓய்வறையைப் பகிர்ந்துகொண்டு, அவருடன் களமிறங்கும் கனவில் மிதந்து கொண்டிருந்தார் ஆயுஷ் டோசேஜா.
ஆனால், போட்டிக்கு முந்தைய நாள், பயிற்சியின்போது அவரது கணுக்காலில் ஏற்பட்ட திடீர் காயம், அவரது கனவைச் சிதைத்தது. "ஒரு குழந்தையாக, விராட் சாருடன் விளையாடுவதை நீங்கள் கனவு மட்டுமே காண முடியும்... அந்த வாய்ப்பு, வந்து போனது போலவே இருந்தது" என்று அந்தத் தருணத்தை ஆயுஷ் டோசேஜா வேதனையுடன் நினைவு கூர்ந்தார்.
ஒருபுறம் கிரிக்கெட், மறுபுறம் MBA!
ஆயுஷ் டோசேஜாவின் கதை, கிரிக்கெட்டுடன் முடிந்துவிடவில்லை. அவர், மீரட்டில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வருகிறார். "நான் சுற்றுப்பயணங்களின் போதும் படிப்பேன்... இது எனது பிளான் 'பி' அல்ல" என்று கூறும் அவர், தனது வாழ்க்கையை கிரிக்கெட், படிப்பு என சமநிலையுடன் அணுகுகிறார்.
சமீபத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சோதனை ஓட்டத்தில் கலந்துகொண்ட அவருக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்தும் அக்டோபர் மாதம் சோதனை ஓட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், ரஞ்சி டிராபிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அந்த அழைப்பை அவர் தவிர்த்துள்ளார். இது, டெஸ்ட் கிரிக்கெட் மீது அவர் வைத்துள்ள மரியாதையைக் காட்டுகிறது.
பயிற்சியாளரின் பெருமிதம்!
ஆயுஷ் டோசேஜாவின் சிறுவயது பயிற்சியாளர் அஜய் சௌத்ரி பேசுகையில், "அவன் 10 வயது சிறுவனாக இருந்தபோதே, அவனது தந்தையுடன் என்னிடம் வந்தான்... அவனது இயல்பே ஆக்ரோஷமான கிரிக்கெட்தான்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications