401 ரன்னா.. தமிழ்நாடு அணிக்கு அதிர்ச்சி.. ரஞ்சி டிராபி காலிறுதியில் எளிதாக வென்ற விதர்பா
நாக்பூர்: 2024-25 ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் விதர்பா அணியிடம் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் விதர்பா அணி, தமிழ்நாடு அணிக்கு 401 ரன்கள் என்று இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது. இவ்வளவு பெரிய இலக்கை எட்டுவது கடினம் என்பதால் தமிழ்நாடு அணி கடும் அழுத்தத்தில் இருந்தது.
இந்தப் போட்டியின் நான்காம் நாள் அன்று, அந்த இலக்கை நோக்கி ஆடிய தமிழ்நாடு அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து, விதர்பா அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் காலிறுதியில் வெற்றி பெற்றது. அதன் மூலம் ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதிக்கும் அந்த அணி முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 353 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் மூத்த வீரரான கருண் நாயர் 122 ரன்கள் சேர்த்தார், ஹர்ஷ் துபே 69 ரன்கள் சேர்த்தார். தமிழ்நாடு அணியில் முகமது இரண்டு விக்கெட்டுகளையும், சோனு யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், விஜய் சங்கர் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸ் ஆடியது. அப்போது முன்னணி வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். ஆறாம் வரிசையில் இறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் 65 ரன்கள், ஏழாம் வரிசையில் இறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 48 ரன்களும் சேர்த்து ஆறுதல் அளித்தனர். தமிழ்நாடு அணி 225 ரன்கள் மட்டுமே எடுத்து, முதல் இன்னிங்ஸில் 128 ரன்கள் பின்தங்கியது. முதல் இன்னிங்ஸில் விதர்பா அணியின் ஆதித்யா தாக்கரே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய விதர்பா அணி 272 ரன்கள் சேர்த்தது. இந்த முறை யாஷ் ரத்தோடு சதம் அடித்து 112 ரன்கள் எடுத்திருந்தார். ஹர்ஷ் துபே இந்த முறையும் அரை சதம் அடித்து, 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
தமிழ்நாடு அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு சுமாராகவே இருந்த நிலையில், 401 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இத்தனை பெரிய இலக்கை நோக்கி ஆடிய தமிழ்நாடு அணி 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.
அதன் பின் பிரதோஷ் ரஞ்சன் பால் 53 ரன்களும், சோனு யாதவ் 57 ரன்களும் அடித்து தமிழ்நாடு அணி 200 ரன்களைக் கடக்க காரணமாக இருந்தனர். தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து விதர்பா அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் இந்தக் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications