மும்பை : ரஞ்சி கோப்பையில் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி டெல்லி அணிக்கு சார்பாக விளையாடுகிறார். இதனால் சொந்த ஊர் ஹீரோவை பார்ப்பதற்காக டெல்லி மக்கள் காலை 5 மணியிலிருந்து நீண்ட தூரம் வரிசையில் நின்று ரயில்வேஸ் அணிக்கு எதிரான இந்த லீக் ஆட்டத்தை பிரோசா கோட்லா மைதானத்தில் கண்டு கழித்தனர்.
நேரம் ஆக, ஆக கூட்டம் அலைமோதியதால் துணை இராணுவ படையினர் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டனர். பத்தாயிரம் ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க வருவார்கள் என கணிக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி 15,000 ரசிகர்கள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திற்குள் நுழைந்தனர்.

இந்த நிலையில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. விராட் கோலி பில்டிங் செய்து கொண்டிருந்து பௌலர்களுக்கும் மற்ற பீல்டர்களுக்கும் தனது அறிவுரையை வழங்கி வந்தார். இந்த சூழலில் 54 ஓவர் முடிவில் ரயில்வே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியின் போது விராட் கோலி ரசிகர் ஒருவர் அத்தனை பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் ஓடி வந்தார். அந்த ரசிகர் ஓடி வந்த வேகத்தை பார்த்து அருகில் இருந்த வீரர்களே பயந்துவிட்டார்கள். நேராக அந்த ரசிகர் விராட் கோலியின் காலை பிடித்துக் கொண்டு அப்படியே காலில் விழுந்தார்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத விராட் கோலி அந்த ரசிகரை எழுந்திருமாறு அறிவுறுத்தினார். இதனை அடுத்து பாதுகாவலர்கள் அந்த ரசிகர்கள் அடித்துப் பிடித்து மைதானத்தை விட்டு வெளியே இழுத்துச் சென்றனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரஞ்சி கோப்பை போட்டிக்கு இவ்வளவு ரசிகர்கள் திரண்டது. 11 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை என தெரிகிறது. கடைசியாக சச்சின் டெண்டுல்கர் ரஞ்சி போட்டியில் விளையாடிய போது 20,000 மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு இருந்தார்கள். இந்த சூழலில் நாளை விராட் கோலி பேட்டிங் செய்யும்போது அந்த ரெக்கார்ட் முறியடிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.