ஹூப்ளி: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025-26 சீசனுக்கான இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி, கர்நாடகாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 67 ஆண்டுகால ரஞ்சிக் கோப்பை கனவை ஜம்மு காஷ்மீர் அணி நனவாக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் 5வது நாளில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு வெற்றி கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்தது. ஷுபம் பண்டிர் 121 ரன்களும், யாவர் ஹாசன் 88 ரன்களும், சாஹில் லோத்ரா 72 ரன்களும், கேப்டன் பராஸ் டோக்ரா 70 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கர்நாடகா தரப்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய கர்நாடகா அணி, ஜம்மு காஷ்மீர் பந்துவீச்சாளர் ஆகிப் நபியின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் 293 ரன்களுக்குச் சுருண்டது. மயங்க் அகர்வால் மட்டும் தனி ஆளாகப் போராடி 160 ரன்கள் குவித்தார். கே.எல். ராகுல் 13 ரன்களிலும், கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. ஜம்மு காஷ்மீர் தரப்பில் ஆகிப் நபி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்கள் முன்னிலை பெற்றது.
291 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜம்மு காஷ்மீர் அணி, 5வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் காம்ரான் இக்பால் ஆட்டமிழக்காமல் 160 ரன்களும், சாஹில் லோத்ரா ஆட்டமிழக்காமல் 101 ரன்களும் குவித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 197 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இறுதியில் ஜம்மு காஷ்மீர் அணி 633 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து ஜம்மு காஷ்மீர் அணி முதன்முறையாக ரஞ்சி டிராபி கோப்பையை வென்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியை ஜம்மு காஷ்மீர் வீரர்கள் மைதானத்தில் உற்சாகமாகக் கொண்டாடினர். சாஹில் லோத்ரா சதம் அடித்ததும் ஹெல்மெட்டைக் கழற்றி ஆரவாரம் செய்தார். ஆகிப் நபி இந்த சீசனில் தனது 60வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். கேப்டன் பராஸ் டோக்ரா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அணியின் இந்த வெற்றி, காஷ்மீரில் கிரிக்கெட் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
