இவருக்கு இப்பயாச்சும் இந்திய அணியில் இடம் கொடுப்பீங்களா?.. தொடர்ந்து 4வது செஞ்சுரி அடித்த அபிமன்யு
கொல்கத்தா: பெங்கால் மாநில அணிக்காக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து நான்காவது சதம் அடித்து சாதனை படைத்து இருக்கிறார். அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது மாற்று துவக்க வீரராக இந்திய அணியில் இடம் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அபிமன்யு ஈஸ்வரன் நீண்ட காலமாக உள்ளூர் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடி வருகிறார். அவருக்கு தற்போது 29 வயதாகும் நிலையில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக அவர் முதல் தர டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக சதம் அடித்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற துலீப் ட்ராபி தொடரின் இரண்டாவது போட்டி மற்றும் மூன்றாவது போட்டியில் சதம் அடித்திருந்தார் அபிமன்யு ஈஸ்வரன்.

அடுத்து இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக ஆடும் போது மேலும் ஒரு சதம் அடித்து இருந்தார். அதை தொடர்ந்து ரஞ்சி ட்ராபி தொடரின் முதல் போட்டியில் பெங்கால் அணிக்காக ஆடிய அவர் உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக சதம் அடித்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 311 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்ஸில் அபிமன்யு 5 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அடுத்து உத்தர பிரதேச அணி 292 ரன்கள் குவித்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தில் அபிமன்யு ஈஸ்வரன் துவக்க வீரராக அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
இதன் மூலம் தொடர்ந்து நான்கு முதல் தர டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார். மேலும், இது அவரது 27ஆவது முதல் தர சதம் ஆகும். இதை அடுத்து அவரை இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரராகவாவது சேர்க்க வேண்டும் என ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் அவருக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் மாற்று துவக்க வீரராக யாரும் இடம் பெறவில்லை. நியூசிலாந்து தொடரிலேயே அபிமன்யு ஈஸ்வரனுக்கு மாற்று துவக்க வீரராக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அபிமன்யு ஈஸ்வரனுக்கு தற்போது 29 வயதாகும் நிலையில் இப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இனி அவர் இந்திய அணியில் இடம் பெறுவது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிடும். அவரது வயதை காட்டி தேர்வுக் குழுவினர் அவரை புறக்கணிப்பார்கள்.


Click it and Unblock the Notifications