செஞ்சுரியை மிஸ் செய்த கிங் கோலி.. தல தோனி யாருன்னு தெரியுமா? விராட் கோலியை காலி செய்த பதிவுகள்
டெல்லி: ரஞ்சி டிராபி போட்டியில் "கிங்" கோலி 94 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார் என ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு அவரை கிண்டல் செய்து வருகின்றனர். விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கவில்லை.
இதற்கு இடையே இந்திய அணியும் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதை அடுத்து பிசிசிஐ அனைத்து வீரர்களையும் உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு அறிவுறுத்தியது. விராட் கோலி 2025 ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்காக ஒரு போட்டியில் ஆட முடிவு செய்தார்.
ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற அவர் முதல் இன்னிங்ஸில் 15 பந்துகளை மட்டும் சந்தித்து 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஹிமான்ஷு சங்வான் என்ற பந்துவீச்சாளரின் இன்ஸ்விங்கில் ஆஃப் ஸ்டம்பு பறக்க மோசமாக ஆட்டம் இழந்தார்.

இது ஒருபுறம் இருக்க இந்த போட்டிக்கு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பில்டப் கொடுக்கப்பட்டு வந்தது. விராட் கோலியை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருப்பதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் அதிக பதிவுகள் வெளியிடப்பட்டு இருந்தன.
தற்போது விராட் கோலி 6 ரன்னில் ஆட்டம் இழந்து இருக்கும் நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகளே அவரை கேலி செய்வதற்கும் முக்கிய காரணமாக மாறி உள்ளன. சிலர் விராட் கோலி 94 ரன்களில் சதத்தை தவறவிட்டார் என கேலி செய்து வருகின்றனர். அவர் சதம் அடிப்பார் என சமூக வலைதளங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததே இந்த கேலியான பதிவுக்கு காரணமாக அமைந்தது.
மேலும், இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கு 27,000 ரசிகர்கள் வந்ததாக செய்திகள் வெளியானது. அதை சுட்டிக்காட்டி எந்த ஒரு உள்ளூர் போட்டிக்கும் இத்தனை ரசிகர்கள் நேரில் வந்ததில்லை என கோலியின் ரசிகர்கள் மார்தட்டி வந்தனர். இதற்கு தோனியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடருக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த தோனி ஒரு பயிற்சிப் போட்டியில் ஆடினார். சிஎஸ்கே அணிக்குள் நடத்தப்பட்ட அந்த பயிற்சி போட்டியை பார்ப்பதற்கு மட்டும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் வந்தனர். அதற்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டதால் பலரால் மைதானத்திற்கு உள்ளே செல்ல முடியவில்லை.
இதை சுட்டிக்காட்டி இருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் ரஞ்சி ட்ராபி போட்டிக்கு தான் 27,000 பேர் வந்தனர். ஒரு பயிற்சி போட்டியை பார்ப்பதற்கே 15,000 ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும், தோனி பயிற்சி செய்வதை பார்க்கவே 10,000 ரசிகர்கள் வருவார்கள் என்பதையும் கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications