Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ranji Trophy Final: தலையால் முட்டிய காஷ்மீர் கேப்டன்.. கொந்தளித்த கே எல் ராகுல்.. என்ன நடந்தது?

ஹூப்ளி: 2026 ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹூப்ளி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியின் இரண்டாவது நாளில், ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன் பராஸ் டோக்ரா கர்நாடகா பீல்டரை தனது தலையால் முட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களத்தில் நடந்த மோதல்

போட்டியின் 101வது ஓவரை கர்நாடகாவின் பிரசித் கிருஷ்ணா வீசினார். அப்போது பராஸ் டோக்ரா மற்றும் கன்ஹையா வாத்வான் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் பராஸ் டோக்ரா பவுண்டரி அடித்தார். அப்போது அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த மாற்று வீரர் கேவி அனீஷ் தொடர்ந்து சீண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பராஸ் டோக்ரா, திடீரென அனீஷை நோக்கிச் சென்று ஹெல்மெட் அணிந்தபடியே தனது தலையால் அவரை முட்டினார். உடனடியாக மயங்க் அகர்வால் மற்றும் கள நடுவர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்தனர்.

Ranji Trophy Final Jammu amp amp Kashmir Captain Paras Dogra Involved in Heated Scuffle with Karnataka Fielders

மன்னிப்பை ஏற்க மறுத்த அனீஷ்

அந்த ஓவர் முடிவடைந்ததும் பராஸ் டோக்ரா தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார். ஆனால் அனீஷ் அதனை ஏற்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் பராஸ் டோக்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. முன்னதாக போட்டியின் முதல் நாளில் விஜயகுமார் வைஷாக் வீசிய பவுன்சர் பந்தில் பராஸ் டோக்ரா காயம் அடைந்து வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்த வாக்குவாதம்

இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ஆடுகளத்தில் மற்றொரு மோதலும் அரங்கேறியது. கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் விஜயகுமார் வைஷாக் மற்றும் பேட்டர் கன்ஹையா வாத்வான் இடையே இந்த மோதல் ஏற்பட்டது. வாத்வான் ஒரு ரன் எடுக்க ஓடியபோது, அவரது முழங்கை பந்துவீசி முடித்து நின்றிருந்த வைஷாக் மீது உரசிக் கொண்டு சென்றது.

இதனால் இரு வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. உடனடியாக நடுவர்கள் தலையிட்டு வைஷாக்கை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விதிமுறைகளின்படி பந்துவீசிய பிறகு பவுலர் தனது இடத்திலேயே நிற்கலாம் என்றும், பேட்டர் தான் தனது பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

வலுவான நிலையில் ஜம்மு காஷ்மீர்

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஜம்மு காஷ்மீர் அணி, பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாளில் சுபம் பண்டிர் 121 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் யாவர் ஹாசன் 88 ரன்களும், அப்துல் சமத் 61 ரன்களும் எடுக்க, ஜம்மு காஷ்மீர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

பராஸ் டோக்ராவின் சாதனை

41 வயதான பராஸ் டோக்ரா, சமீபத்தில் ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் 10,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். வாசிம் ஜாபருக்கு அடுத்தபடியாக அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இது அவரது 27வது ரஞ்சிக் கோப்பை சீசனாகும். 17 ஆண்டுகள் இமாச்சலப் பிரதேச அணிக்காகவும், பின்னர் புதுச்சேரி அணிக்காகவும் விளையாடிய அவர், கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணிக்கு மாறினார். நடப்பு சீசனில் 9 போட்டிகளில் 551 ரன்களைக் குவித்து அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 25, 2026, 14:48 [IST]
Other articles published on Feb 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+