Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ranji Trophy: 67 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. ரஞ்சி வரலாற்றில் முதல் பைனல் சென்ற ஜம்மு காஷ்மீர்

கொல்கத்தா: இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கிய தொடரான ரஞ்சி டிராபியில் ஜம்மு காஷ்மீர் அணி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 67 ஆண்டுகளில் முதல்முறையாக ரஞ்சி டிராபி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அந்த அணி அசத்தியுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இரண்டு முறை சாம்பியனான பலம் வாய்ந்த வங்காள அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வரலாற்று வெற்றி

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி நீண்ட காலமாகவே ஒரு சாதாரண அணியாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த சீசனில் அவர்கள் வெளிப்படுத்திய ஆட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள வங்காள கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், நட்சத்திர வீரர்கள் நிறைந்த வங்காள அணியை அவர்கள் வீழ்த்திய விதம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Ranji Trophy Jammu and Kashmir Creates History by Entering Ranji Trophy Final for the First Time in 67 Years

இந்தப் போட்டியில் வெற்றி பெற 126 ரன்கள் தேவை என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணிக்கு, அப்துல் சமத் மற்றும் இளம் வீரர் வன்ஷஜ் சர்மா ஆகியோர் நம்பிக்கையளித்தனர். அப்துல் சமத் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். வன்ஷஜ் சர்மா பொறுப்புடன் ஆடி 43 ரன்கள் குவித்தார். முகேஷ் குமார் வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்டி வன்ஷஜ் சர்மா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மிரட்டிய ஆகிப் நபி

இந்த வெற்றியின் உண்மையான கதாநாயகன் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தான். மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர், இந்த அரையிறுதிப் போட்டியிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்காள அணியின் பேட்டிங் வரிசையைச் சிதறடித்தார்.

குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் வங்காள அணியை வெறும் 99 ரன்களில் சுருட்டியதில் இவரது பங்கு முக்கியமானது. இந்தச் சீசனில் மட்டும் அவர் 55 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

நட்சத்திரங்கள் இருந்தும் தோல்வி

வங்காள அணியில் முகமது ஷமி, ஆகாஷ் தீப், முகேஷ் குமார், ஷாபாஸ் அகமது மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் என இந்திய அணி வீரர்கள் பலர் இருந்தனர். சொந்த மைதானம் வேறு. இருப்பினும், ஜம்மு காஷ்மீர் அணியின் ஒட்டுமொத்தப் போராட்ட குணத்திற்கு முன்னால் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

கேப்டன் பராஸ் டோக்ரா சாதனை

ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டனும், 41 வயது மூத்த வீரருமான பராஸ் டோக்ராவுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்தப் போட்டியின் மூலம், ரஞ்சி டிராபி வரலாற்றில் 10,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். வாசிம் ஜாபருக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டியவர் இவரே.

கடினமான பயணம்

ரஞ்சி டிராபியில் அறிமுகமாகி 44 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. 2013-14 சீசனில் காலிறுதி வரை முன்னேறியதே அவர்களின் சிறந்த சாதனையாக இருந்தது. ஆனால் இன்று பயிற்சியாளர் அஜய் சர்மா மற்றும் கேப்டன் பராஸ் டோக்ரா ஆகியோரின் வழிகாட்டுதலில், ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பையை வெல்லும் வாய்ப்புடன் உள்ளது.

கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் அணிகள் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆடி வருகின்றன. இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி யாரை எதிர்கொள்ளும் என்பது விரைவில் தெரியவரும்.

Story first published: Wednesday, February 18, 2026, 14:36 [IST]
Other articles published on Feb 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+