உயிர் பிழைச்சு வந்திருக்கேன்.. இனி யார் தண்ணி கொடுத்தாலும் குடிக்க மாட்டேன்.. இப்படி ஆகிப் போச்சே
பெங்களூர் : கர்நாடகா மாநில கிரிக்கெட் அணியில் இடம் பெற்று ரஞ்சி கோப்பை தொடரில் ஆடி வரும் இந்திய வீரர் மயங்க் அகர்வால், இனி எப்போதும் எங்கேயும் அடுத்தவர்கள் கொடுக்கும் தண்ணீரை குடிக்கப் போவதில்லை என சொல்லாமல் சொல்லி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் கையில் ஒரு வாட்டர் பாட்டில் வைத்திருக்கிறார். அதன் கீழ், "இனி வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கவே கூடாது பாபா" எனும் ஹிந்தி திரைப்பட வசனம் ஒன்றை எழுதி இருக்கிறார். அவர் இப்படி சொல்லக் காரணம், சில வாரங்கள் முன்பு அவருக்கு விமான பயணத்தின் போது ஏற்பட்ட மோசமான அனுபவம் தான்.

திரிபுராவில் நடந்த கர்நாடகா - திரிபுரா ரஞ்சி போட்டியில் பங்கேற்க சென்ற மயங்க் அகர்வால் அங்கிருந்து விமானத்தில் திரும்பினார். அப்போது விமானத்தில் தனக்கு முன் இருந்த பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தி இருக்கிறார். ஆனால், அதில் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனம் இருந்துள்ளது. அது தெரியாமல் அவர் அருந்திய நிலையில் கடும் எரிச்சல் மற்றும் வலி ஏற்பட்டு அவர் துடித்தார். பின்னர் விமானத்தில் இருந்து அவரை இறக்கி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு வயிறு மற்றும் வாயின் உட்புறத்தில் காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் காவல்துறையில் அந்த வாட்டர் பாட்டில் தன் இருக்கைக்கு முன்னதாக எப்படி வைக்கப்பட்டது? என சந்தேகமாக உள்ளதாகவும், அது குறித்து விசாரிக்குமாறும் புகார் அளித்து இருந்தார். அதன் பின் அந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து மீண்ட அவர் மீண்டும் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடி வருகிறார்.
அதற்காக மீண்டும் விமான பயணங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் இனி தான் எப்போதும் பிற வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர் அருந்தப் போவதில்லை என்ற முடிவில் இருப்பதை வேடிக்கையாக சுட்டிக் காட்டும் வகையில் தானே எடுத்து வந்த வாட்டர் பாட்டிலை புகைப்படம் எடுத்து பகிர்ந்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications