விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் ஹிமான்ஷு செய்த செயல்.. கொந்தளித்த ரசிகர்கள்.. என்ன நடந்தது?
டெல்லி: விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய உடன் அதை வெறி கொண்டு கொண்டாடிய ரயில்வேஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹிமான்ஷு சங்வான் மீது கோலியின் ரசிகர்கள் பாய்ந்து வருகின்றனர். அவர் விராட் கோலி ஆட்டம் இழந்த பின் அமைதியாக இருந்திருக்க வேண்டும் எனவும், விராட் கோலியை அவமதித்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர்.
ஹிமான்ஷு சங்வான், சங்வான் என பெயர் கொண்ட பல அப்பாவிகளின் சமூக வலைதள கணக்குகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர் விராட் கோலி ரசிகர்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினார் விராட் கோலி. டெல்லி அணியில் இடம் பெற்ற அவர் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். நான்காம் வரிசையில் களமிறங்கிய விராட் கோலி 15 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
ரயில்வேஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஹிமான்ஷு சங்வான் வீசிய இன்ஸ்விங்கர் பந்தை விராட் கோலி கணிக்கத் தவறினார். அதனால் இன்ஸ்விங் ஆன பந்து விராட் கோலியின் ஆஃப் ஸ்டம்பை பறக்க விட்டது. சில அடி தூரம் பறந்து சென்று தான் அந்த ஸ்டம்பு விழுந்தது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஒருவரின் விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த ஹிமான்ஷு சங்வான் அந்த விக்கெட்டை வெறிகொண்டு கொண்டாடினார்.
ஆஃப் ஸ்டம்பு சில அடி தூரம் பறந்தது அவர் அப்படி கொண்டாடுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். முக்கிய விக்கெட் என்பதாலும் இருந்திருக்கலாம். ஆனால், விராட் கோலியின் ரசிகர்கள் அவரது கொண்டாட்டத்தை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஹிமான்ஷு சங்வான் கோலியை அவமதித்து விட்டதாகவும், இனி அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது எனவும் கூறி வருகின்றனர்.
மேலும், சமூக வலைதளங்களில் ஹிமான்ஷு சங்வான் என பெயருடைய பல்வேறு கணக்குகளை தேடி அவர்களை திட்டி வருகின்றனர். ஹிமான்ஷு சங்வானின் உண்மையான சமூக வலைதள கணக்கு எதுவென்றே தெரியாமல் ஹிமான்ஷு, சங்வான் என்ற பெயர் கொண்ட பல்வேறு நபர்களை விராட் கோலி ரசிகர்கள் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
அதை பலரும் ஸ்க்ரீன்ஷாட் (Screenshot) எடுத்து, பகிர்ந்து உள்ளனர். விராட் கோலியின் ரசிகர்கள் சிலர் படிப்பறிவு இல்லாதவர்கள் என பதிலுக்கு விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications