லண்டன்: 145 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு அரிய நிகழ்வு, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஜூன் 11 அன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி நான்கு விக்கெட் இழந்து 43 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆட்டத்தின் போது இரண்டு அணியின் முதல் துவக்க வீரர்களும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள்.

ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா ஆட்டத்தின் முதல் பந்தை சந்தித்தார். அவர் மொத்தம் 20 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதே போல, தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரராக எய்டன் மார்க்ரம் இறங்கினார். அவர் முதல் ஓவரை முழுமையாக சந்தித்து மொத்தம் ஆறு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
1880 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது முதல் 145 ஆண்டுகளில் இதுவரை இங்கிலாந்து மண்ணில் இரண்டு அணிகளின் துவக்க வீரர்களும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இல்லை. இந்த அரிய நிகழ்வு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்துள்ளது.
இது போன்ற நிகழ்வு இங்கிலாந்தை தவிர மற்ற இடங்களில் ஒன்பது முறை நடந்துள்ளது. தற்போது பத்தாவது முறையாக இந்த அரிய நிகழ்வு டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் இதுவரை 561 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. இத்தனை போட்டிகளிலும் இப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் பியூ வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி அடுத்து பேட்டிங்கில் திணறியது. நிறைய பந்துகளை வீணடித்து நிதான ஆட்டம் ஆடியது. அப்படி இருந்தும் நான்கு விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது தென்னாப்பிரிக்கா அணி.