”இந்திய குடிமகனாக மாறிவிடு”.. விஐபி தந்த வாய்ப்பை மறுத்த ரஷித் கான்.. பின்னணியில் நடந்த ரகசியம்
டெல்லி: இந்திய அணியில் விளையாடவும், இந்தியாவில் நிரந்தரமாக வசிக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பை, ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நிராகரித்த தகவல் தற்போது வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை பெரிய வாய்ப்பை அவர் ஏன் மறுத்தார்? அந்த ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன?
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான 27 வயது ரஷித் கான், தனது வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் வகையில் ஒரு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். அதில்தான் அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரஷித் கான் விளையாடிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்திய அதிகாரியின் ஆஃபர்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தன்னைச் சந்திக்க விரும்புவதாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகி ஒருவர் ரஷித் கானிடம் கூறியுள்ளார். அந்தச் சந்திப்பு குறித்து ரஷித் கான் தனது புத்தகத்தில், "நான் அந்த அதிகாரியைச் சென்று சந்தித்தேன். அவர் என்னிடம், 'உங்கள் நாடான ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் இந்தியாவிலேயே தங்கிவிடுங்கள். அதற்கான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் தருகிறோம். இங்கேயே வாழ்ந்து, இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுங்கள்' என்று கூறினார்.
இதைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. பின்பு புன்னகையுடன், 'மிக்க நன்றி, ஆனால் நான் எனது தாய்நாடான ஆப்கானிஸ்தானுக்காகவே விளையாடுகிறேன்' என்று அதனை மறுத்துவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவும் தனக்கு இதேபோல ஆஃபர் கொடுத்ததாகவும், "நான் என் நாட்டிற்காக விளையாடாவிட்டால், வேறு எந்த நாட்டிற்காகவும் விளையாட மாட்டேன்" என அவர்களிடம் உறுதியாகக் கூறிவிட்டதாகவும் ரஷித் தெரிவித்துள்ளார்.
2018 சம்பவத்தின் பின்னணி
ரஷித் கான் குறித்து இந்தியாவில் இப்படி பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த 2018 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷித் கான், கொல்கத்தா அணிக்கு எதிராக வெறும் 10 பந்துகளில் 34 ரன்கள் குவித்து, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டினார். அந்த சமயத்தில் இந்திய ரசிகர்கள் ரஷித் கானுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அப்போதைய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நேரடியாகத் தலையிட்டு, "ரஷித் கான் எங்கள் நாட்டின் தேசியப் பெருமை. எங்களது மிகச்சிறந்த கிரிக்கெட் சொத்தான அவரை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் தெருக்களில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, 2020 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்துள்ள ரஷித் கான், எவ்வளவு பெரிய வாய்ப்புகள் வந்தாலும் தனது தாய்நாட்டை விட்டுக் கொடுக்காதது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications