மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்
மான்செஸ்டர்: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் மோசமான சாதனை படைத்திருக்கிறார்.
இங்கிலாந்து மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான போட்டி மான் செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கி 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தனர்.
அதில், கேப்டன் மோர்கன் ருத்ர தாண்டவம் ஆடினார். 71 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். அதில் 17 சிக்ஸர்கள் விளாசினார். அதாவது 102 ரன்கள் சிக்சர்களால் வந்தது. பெயர்ஸ்டோவ் 90, ரூட் 88 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில், மொயின் அலி 9 பந்துகளில் 4 சிக்சர் விளாசி 31 ரன் குவித்தார்.

சிக்சர்களால் சாதனை
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி பட்டியலில் தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. ஏற்கனவே ஒரு இன்னிங்சில் 24 சிக்சர்கள் அடித்து இங்கிலாந்து முதலிடத்தில் இருந்தது.

இங்கிலாந்தின் சிக்சர்
தற்போது, இந்த போட்டியில் இங்கிலாந்து 25 சிக்சர் விளாசி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 23, நியூசிலாந்து அணி 22 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

பந்துவீச்சில் சாதனை
பேட்டிங்கில் ஒரு சாதனை என்றால்... பவுலிங்கிலும் ஒரு சாதனை இருக்கிறது. அது ரஷித் கானின் மோசமான சாதனை. இந்தப் போட்டியில் அதிகம் அடித்து நொறுக்கப் பட்டது அவரது ஓவர்கள் தான்.

110 ரன்கள் விளாசல்
அவர் வீசியது 9 ஓவர்கள். கொடுத்தது 110 ரன்கள். இவர் ஓவரில் மட்டும் 11 சிக்சர்கள் விளாசப்பட்டன. பவுலிங் ரன்ரேட் 12.22. உலகக் கோப்பை வரலாற்றில் ஒருவரது பந்தில் அடிக்கப்பட்ட அதிக ஸ்கோர் இது என்ற மோசமான சாதனை அவர் வசம் வந்தது.


Click it and Unblock the Notifications