“200 சதம் கூட அடிங்க, அதுக்கு சரிவரலையே”.. விராட் கோலியின் கம்பேக்.. பாக். சீனியர் கடும் விளாசல்!
லாகூர்: இந்திய அணி வீரர் விராட் கோலியின் சதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் மோசமாக விமர்சித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்தது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்தாலும், 3வது போட்டியில் தரமான பதிலடியை கொடுத்திருந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு விராட் கோலி அடித்த சதமும் முக்கிய காரணமாக அமைந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் கோலி தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

விராட் கோலி கம்பேக்
சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சதமே அடிக்காமல் இருந்த கோலி, 44வது சதத்தை பூர்த்தி செய்து தனது காத்திருப்பை முடித்துக்கொண்டார். மேலும் சர்வதேச அளவில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் ( 72 சதங்களை அடித்து ) ரிக்கிப் பாண்டிங்கை முந்தினார். தற்போது அவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 100 சதங்களுடன் இருக்கிறார்.

கடும் விமர்சனம்
இந்நிலையில் இதெல்லாம் பெருமையா என்பது போல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது சதங்களை எண்ணிப் பார்ப்பதற்கான நேரம் இல்லை. அது ஒரு விஷயமே கிடியாது. இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும். இந்திய அணி 100 சதங்களை அடிக்கலாம் 200 சதங்களை அடிக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டிற்காக என்ன செய்தார் என்பதே இங்கு பேச்சாக இருக்கும்.

பணம் முக்கியமில்லை
பொருளாதார ரீதியாக பார்த்தால் இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவை நீண்ட தூரத்தில் இருக்கின்றன. ஆனால் நீண்ட வருடங்களாக கோப்பை வெல்லாததால், இந்திய கிரிக்கெட் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. கோலி என்ன சதம் அடித்து யாருக்கு பலன், 2019 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை, 2 டி20 உலகக்கோப்பை என பலவற்றை தவறவிட்டுவிட்டனர். எனவே அதுதான் தற்போது அவர்களுக்கு முக்கியம் எனக்கூறியுள்ளார்.

அடுத்த உலகக்கோப்பை
2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த தொடரில் சொந்த மண்ணிலாவது இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. ரோகித், ஷிகர் தவான், போன்றவர்களுக்கு இது கடைசி உலகக்கோப்பையாக கூட இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications