தோல்விக்கு சாம் கர்ரன் தான் காரணம்.. இங்கிலாந்து இல்லை.. பிதற்றும் ரவி சாஸ்திரி
டெல்லி : ரவி சாஸ்திரிக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை. சமீப காலமாக அவர் அளித்து வரும் பேட்டிகள் முன்னுக்கு பின் முரணாகவும், சொல்லும் கருத்துக்கள் முதிர்ச்சி இல்லாதவை போலவும் இருக்கின்றன.
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் படு தோல்வி அடைந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என மோசமாக இழந்தது.
தோல்விக்கு பின்னும் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல், நாங்கள் சிறந்த அணி, நன்றாக போராடினோம், 15 வருடங்களில் இல்லாத வகையில் சிறந்த அணி இதுதான் என கூறி வருகிறார் ரவி சாஸ்திரி. தற்போது மேலும் ஒரு புதிய கருத்தாக சாம் கர்ரன் தான் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தினார் என ஒரே போடாக போட்டுள்ளார்.

நாங்கள் போராடினோம்
ரவி சாஸ்திரி என்ன சொன்னார் என்பதை பார்ப்போம். "நாங்கள் மோசமாக தோற்றோம் என நான் சொல்ல மாட்டேன். நாங்கள் முயன்றோம். விராட் மற்றும் என்னிடம், இந்த தொடருக்கான சிறந்த இங்கிலாந்து வீரரை தேர்ந்தெடுக்க கூறினார்கள். நாங்கள் சாம் கர்ரனை தான் தேர்வு செய்தோம். சாம் எங்கே ரன் எடுத்தாரோ நாங்கள் அங்கே தோற்றோம். இங்கிலாந்தை விட எங்களை அதிகம் பாதித்தது சாம் கர்ரன் தான்" என கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

சாம் கர்ரன் என்ன செய்தார்
மேலும் ரவி சாஸ்திரி கூறுகையில், "இங்கிலாந்து முதல் டெஸ்டில் 87-7 என இருக்கும் போது, சாம் கர்ரன் தான் ரன் குவித்தார். நான்காவது டெஸ்டில் 86-6 என இருக்கும் போதும் அவர் தான் ரன் குவித்தார். முதல் டெஸ்டில் நாங்கள் 50 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்தோம். அப்போதும் அவர் தான் விக்கெட் எடுத்தார். முக்கியமான நேரத்தில் அவர் நன்றாக செயல்பட்டார். அதுதான் இரண்டு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம்" என கூறினார்.

இரண்டு போட்டி சரி..மற்றவை?
சாம் கர்ரன் இரண்டு போட்டிகளில் தான் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு சாதகமாக போட்டியை கொண்டு சென்றார். அது முதல் மற்றும் நான்காம் டெஸ்ட் போட்டி. ரவி சாஸ்திரி சொல்வது உண்மை என்றால் சாம் கர்ரன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்று இருக்க வேண்டும். ஏன் ரவி சாஸ்திரி இப்படி குழப்பி வருகிறார் என்பது புரியவில்லை.

சாமின் அனுபவம் என்ன?
அவர் சொல்லும் சாம் கர்ரன் இந்தியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தான் ஆடி இருந்தார். அந்த அனுபவமற்ற இளம் வீரரிடம், உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி வீழ்ந்தது என சொல்வதற்கே அவமானப்பட வேண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர். ஆனால், அதை சொல்லி இந்திய அணியின் தவறுகளை அவர் மறைக்க முயல்வதை என்னவென்று சொல்வது?


Click it and Unblock the Notifications