யாருமே ஒழுங்கா ஆடலை.. ஏன் இந்தியாவை மட்டும் குறி வைக்கிறீங்க?
மும்பை : இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிநாடுகளில் தோல்வி தழுவுவதற்கு இந்திய அணியை மட்டும் குற்றம் சாட்டுகிறார்கள் என கூறியுள்ளார்.
இந்திய அணி இந்த ஆண்டு இதுவரை இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்துள்ளது.
எனினும், ரவி சாஸ்திரி இப்போதுள்ள இந்திய அணிதான் சிறந்த அணி என கூறி வந்தார். தற்போது, மற்ற நாடுகளும் தான் தோல்வி அடைகின்றன என கூற ஆரம்பித்துள்ளார்.

2018 டெஸ்ட் தோல்விகள்
இந்தியா இந்த ஆண்டில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்தது. அதிலும் இங்கிலாந்தில் மிக மோசமாக 4-1 என டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா.

எந்த அணி சிறப்பாக ஆடுகிறது?
தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடர் முடிந்த உடன், டெஸ்ட் தொடரில் வரும் டிசம்பர் 6 முதல் ஆடவுள்ளது. அதையொட்டி பேசிய ரவி சாஸ்திரி, "இப்போது எந்த அணி வெளிநாடுகளில் சிறப்பாக ஆடுகிறது? நிறைய அணிகள் அப்படி இல்லை" என அடுத்தவர்கள் குறையை சுட்டிக் காட்டியுள்ளார் ரவி சாஸ்திரி.

ஏன் இந்தியா மட்டும்?
"கடந்த ஐந்து - ஆறு வருடங்களில், எந்த அணி சிறப்பாக ஆடியது என கூற முடியுமா? ஏன் இந்தியாவை மட்டும் குறி வைக்கிறீர்கள்?" என கேட்டார் ரவி சாஸ்திரி.

ரவி சாஸ்திரி சப்பைக்கட்டு
இந்தியா மிக சில முக்கிய தருணங்களில் சொதப்பியதால் தான் டெஸ்ட் தொடர்களை இழந்தது. மற்றபடி இந்தியா சிறப்பாகவே ஆடி வருகிறது என கூறி இந்திய அணியின் கடந்த கால தோல்விகளை மறைக்க முயற்சித்தார் ரவி சாஸ்திரி. ஆஸ்திரேலிய அணி இப்போது வலுவிழந்து இருப்பதால், எப்படியும் இந்தியா வெற்றி பெற்று விடும் என்ற கருத்தே அனைவரிடமும் உள்ளது.


Click it and Unblock the Notifications