இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராகிறாரா ரவி சாஸ்திரி? முன்னாள் வீரர் சொன்ன கருத்து
மும்பை: தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ் சோப்ரா, ரவி சாஸ்திரி தேர்வுக்குழுவின் தலைவரானால் மட்டுமே இந்த அணி தேர்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "ரவி சாஸ்திரி யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்துள்ளார். இது மிகவும் சுவாரஸ்யமான தேர்வு. அவர் பல தொடக்க ஆட்டக்காரர்களுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளார். கேஎல் ராகுலுடன் ரிஷப் பண்ட்டையும் சேர்த்துள்ளார். இது சற்று வித்தியாசமான அணி. ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார் என்பது உண்மைதான்.

ஆனால் அவர் அணியில் இடம் பிடிப்பாரா? இது கடினமான கேள்வி. ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் சற்று அநியாயமாக நடத்தப்பட்டுள்ளார் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். விளையாட வைக்காமலேயே அவர் நீக்கப்பட்டார், ஆனால் இப்போது உலகக்கோப்பைக்கு மிக அருகில் இருக்கும் நேரத்தில் அவர் அணியில் இடம் பெறுவாரா? தற்போது இஷான் கிஷனின் ஃபார்ம் தான் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது" என்று தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
"அக்சர் படேல் மற்றும் ஜடேஜா ஆகிய இரண்டு இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களுடன் ஹர்திக் பாண்டியாவையும் அவர் சேர்த்துள்ளார். நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு அவரது அணியில் இடமில்லை. அனுபவம் வாய்ந்த சிறந்த ஆல்-ரவுண்டர்களைத் தேர்வு செய்திருப்பது சரியான முடிவுதான்" என்று கூறியுள்ளார்.
"பும்ரா, சிராஜ், குல்தீப் ஆகியோரது தேர்வில் எவ்வித கேள்வியும் இல்லை. ஆனால் ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவருமே சுவாரஸ்யமான தேர்வுகள். ஷமி, புவனேஷ்வர், பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் சேர்க்கை இந்த அணியை முற்றிலும் வித்தியாசப்படுத்துகிறது. இந்த அணிக்கு நான் 10க்கு 8 புள்ளிகள் வழங்குவேன். ரவி சாஸ்திரியே தேர்வுக்குழு தலைவராக மாறினால் ஒழிய, இதுபோன்ற ஒரு அணி தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன். மேலும், இந்த அணியில் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது குறையாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார்.
ரவி சாஸ்திரி தேர்வு செய்த அணி: ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ்.
தற்போதைய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் 2026 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிசிசிஐ-யின் தேர்வுக்குழுவின் அடுத்த தலைவராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications

