விராட் கோலி ஓய்வு முடிவு எடுக்க காரணமே இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரவி சாஸ்திரி.. என்ன சொன்னார்?
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து, முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பிரத்தியேகத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். விராட் கோலியின் நெருக்கமான ஆலோசகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் ரவி சாஸ்திரி. இந்த நிலையில், விராட் கோலி தனது ஓய்வு முடிவு குறித்து ரவி சாஸ்திரியிடம் முன்பாகவே பேசியிருக்கிறார். அப்போது என்ன நடந்தது, விராட் கோலியின் மனநிலை எப்படி இருந்தது என ரவி சாஸ்திரி விவரித்துள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: "நான் விராட் கோலியிடம் பேசினேன். அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு வாரம் முன்பே நாங்கள் பேசினோம். அவரது மனநிலை அப்பொழுது தெளிவாக இருந்தது. 'நமக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டோம்' என்ற மனநிலையில் அவர் இருந்தார். அவர் எந்த வருத்தத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. நான் தனிப்பட்ட முறையில் ஒன்று அல்லது இரண்டு கேள்விகளை அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் மிகவும் தெளிவாகப் பதில் சொன்னார். அவர் மனதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்பொழுது எனக்குச் சரி, இதுதான் சரியான நேரம் என்று தோன்றியது. உடலும் மனமும் இதுதான் சரியான நேரம் என்று அவருக்குச் சொல்லி இருக்கிறது. அவர் ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தால், 100% தனது அர்ப்பணிப்பைக் கொடுக்க நினைக்கிறார். அதை அத்தனை எளிதாக மீண்டும் நாம் செய்துவிட முடியாது.
ஒரு வீரர் ஒரு வேலையைச் செய்யும்போது நாம் பின்னே அமர்ந்து கொள்ளலாம். ஆனால், விராட் கோலி அணியுடன் ஆடுகளத்தில் இருந்தால், அவர் அனைத்து விக்கெட்டுகளையும் எடுக்கிறார், அவர் அனைத்து கேட்ச்சுகளையும் பிடிக்கிறார், அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்க வேண்டும் என்பது போலத்தான் இருக்கும்.
அவரது ஈடுபாடு அத்தனை தாக்கத்துடன் இருக்கும். அது போல இருக்கும்போது, ஏதோ ஒரு கட்டத்தில் அது தொய்வை ஏற்படுத்தும். அவர் ஓய்வு இன்றி இருக்கும்போது, அவர் ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திலும் எவ்வளவு விளையாட வேண்டும் எனப் பிரித்துப் பார்க்காதபோது, இது போன்ற தொய்வு ஏற்படும்.
உலகம் முழுவதிலும் விராட் கோலி தனது சாதனைகளைச் செய்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவிலான ரசிகர் கூட்டம் விராட் கோலிக்கு இருக்கிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு மக்கள் நேரில் வருகிறார்கள். அந்த அளவுக்கு இவருக்கு அன்பு மற்றும் வெறுப்பு என இரண்டும் கலந்த ஒரு உறவு ரசிகர்களிடையே இருக்கிறது.
விராட் கோலியை எளிதாக எதிர் அணி ரசிகர்களைக் கோபமடையச் செய்துவிடுவார். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதுக்குள் சென்றுவிடுவார். அவர் கொண்டாடும் முறை, அதன் தாக்கம் அத்தகையது. அது மிக வேகமாகப் பரவும். ஓய்வறை மட்டுமல்ல, மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீட்டின் அறையிலும் அது பரவும்.
நான் விராட் கோலி இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், அவரது முடிவு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், மனதளவில் நீங்கள் வறுத்து எடுக்கப்பட்டு, அதிகப்படியாகப் பயன்படுத்தப்பட்டு இருந்தால், உங்கள் உடலுக்கு 'இது போதும்' என்றுதான் சொல்லும்.
நீங்கள் இந்த விளையாட்டில் உடல் அளவில் மிகவும் தகுதியான வீரராக இருக்கலாம். அணியில் இருக்கும் பாதி வீரர்களை விட நீங்கள் உடல் அளவில் தகுதியானவராக இருக்கலாம். ஆனால், மனதளவில் உங்களது ஆட்டம் முடிந்துவிட்டது, அதுதான் உடலுக்குச் செய்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது" என்றார் ரவி சாஸ்திரி.


Click it and Unblock the Notifications