
பயிற்சி இல்லாத இந்திய அணி
இந்தியாவில் லாக்டவுன் மிகவும் கடுமையாக இருந்ததாகவும், வெளியில் வரமுடியாமல் வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கியதாகவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல்லுக்கு முன்னதாக எந்தவித பயிற்சியும் இந்திய வீரர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மைதானங்களில் பயிற்சி
மாறாக ஆஸ்திரேலிய வீரர்கள் சுதந்திரமாக உலவியதாகவும், அருகில் உள்ள மைதானங்களை பயன்படுத்தி பயிற்சி பெற்றதாகவும் அவர் மேலும் கூறினார். மேலும் இங்கிலாந்துடன் குறைந்த ஓவர்கள் தொடரில் பங்கேற்று விளையாடியதும் அவர்களுக்கு சிறப்பாக அமைந்ததாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

நிரூபிக்கும் அவசியம் இல்லை
முதலில் ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தபோது அவர்கள் சோர்வடைந்ததாகவும் மூன்றாவது போட்டியில் வெற்றி அடைந்த பின்பே அவர்களது மனநிலை மாற்றமடைந்ததாகவும் அவர் மேலும் கூறினார். இந்நிலையில் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டுள்ளதால் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

பொறுப்பை உணர்ந்த வீரர்கள்
ரோகித் சர்மா மற்றும ஜஸ்பிரித் பும்ரா இல்லாத இளம் அணி வெற்றியடைந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ரவி சாஸ்திரி, வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹர்திக் மற்றும் நடராஜனின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பாக இருக்கும்
முதல் பகலிரவு போட்டியில் விராட் கோலி மற்றும் பும்ராவின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவம் உணர்ந்தே பும்ராவிற்கு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் அவர் தற்போது ஓய்வுடன் கூடிய புத்துணர்வுடன் டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











