For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளிலும்.. கோலி கேப்டன் பொறுப்பை துறக்கலாம்.. ரவி சாஸ்திரி சொன்ன பரபர காரணம்!

டெல்லி: விராட் கோலி ஏற்கனவே டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர் விரைவில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் லீக் சுற்றில் சூப்பராக விளையாடிய பெங்களூரு, ப்ளேஆப் சுற்றில் வழக்கம் போலச் சொதப்பினர். அப்போது தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியானது.

ஐபிஎல் மற்றும் இந்திய அணியின் டி20 கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார் விராட் கோலி. அவருக்கு கேப்டனாக இது கடைசி டி20 உலகக் கோப்பை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

டி 20 உலகக் கோப்பை

டி 20 உலகக் கோப்பை

இருப்பினும், ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற இந்தாண்டு டி20 உலகக் கோப்பை இந்திய ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்கும் கூட மறக்க வேண்டிய ஒரு தொடராக அமைந்துவிட்டது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஐசிசி தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா வீழ்வது இதுவே முதல்முறையாகும். அடுத்து நியூசிலாந்து அணியும் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இப்படி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததால் இந்திய அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல மற்ற அணிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மறக்க வேண்டியது

மறக்க வேண்டியது

இந்தியா தனது கடைசி 3 போட்டிகளில் ஆப்கன், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகளைத் தோற்கடித்தது. ஆப்கன் தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்தியாவுக்கு அடுத்த சுற்று வாய்ப்பிருந்தது. இருப்பினும், அந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற, இந்தியா லீக் சுற்றுடன் மூட்டையைக் கட்டியது. இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு பிறகு கோலி மீதான விமர்சனம், குறிப்பாக அணித் தேர்வில் அவர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக விமர்சனம் அதிகரித்தது.

விராட் கோலி

விராட் கோலி

மேலும், விரைவில் கோலி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகவுள்ளதாகத் தகவல் வெளியானது. இப்படி பல்வேறு யூகங்கள் இணையத்தில் பரவி வந்த நிலையில் அடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

இது குறித்து இந்தியா டூடே செய்தி நிறுவனத்திடம் பேசிய ரவி சாஸ்திரி, "விராட் கோலி கேப்டன்சியில் கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா நம்பர் 1 அணியாகவே இருந்துள்ளது. மனரீதியாகச் சோர்வாக இருப்பதாலும், பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார். எனவே வரும் காலத்தில் எதுவும் நடக்கலாம். உடனடியாக நடக்காது என்றாலும் கூட அதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒருநாள் போட்டிகளில்

ஒருநாள் போட்டிகளில்

ஒருநாள் போட்டிகளிலும் கூட அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கூட அவர் விலகும் சூழல் ஏற்படலாம். இதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவரது மனமும் உடலும்தான் இந்த முடிவை எடுக்கும். கோலி என்று இல்லை, பல நட்சத்திர வீரர்களும் கூட தங்கள் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளனர். அவர் அணியில் இருக்கும் மற்ற வீரர்களைக் காட்டிலும் ஃபிட்டாக உள்ளார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் தகுதியுடன் இருக்கும்போது, ​​உங்கள் திறன் அதிகரிக்கிறது. கேப்டன் பதவியில் அது அவருடைய முடிவு. ஆனால் என்னைக் கேட்டால், அவர் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர வேண்டும். அது தான் சரியானதாக இருக்கும்.

ஓய்வு தேவை

ஓய்வு தேவை

குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் அனைத்து வீரர்கள் மீதும் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து வீரர்களுக்கும் போதியளவு ஓய்வு தேவை. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய வீரர்களுக்கும் போதிய நீண்ட ஓய்வு தேவை. அவ்வப்போது இதுபோன்ற ஓய்வுகளை எடுக்க வேண்டும். ஐபிஎல் தொடர் முடிந்த சில நாட்களில் உலகக் கோப்பை போன்ற தொடரில் விளையாடுவது சரியானது இல்லை.

திட்டமிடல் முக்கியம்

திட்டமிடல் முக்கியம்

அதேநேரம் கொரோனாவால் போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டதற்கு பிசிசிஐ அமைப்பைக் குறை கூற விரும்பவில்லை. ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டதால், அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் இப்படி நடக்கக் கூடாது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என கபில் தேவ் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். பிசிசிஐ மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டின் வாரியமும் திட்டமிடலில் கவனமாக இருக்க வேண்டும். உலகில் உள்ள எந்தவொரு நாட்டை விடவும் நாம் அதிகப்படியான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறோம் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா

நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப் போட்டி குறித்துப் பேசிய அவர், "இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள், கடந்த 6 மாதங்களில் பெரிதாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அதனால் உள்ள வித்தியாசத்தை நீங்கள் தெளிவாகக் காணலாம். குறைந்த அளவிலேயே அவர்கள் விளையாடியுள்ளனர். அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்துள்ளது, இது முக்கிய காரணம்" என்று அவர் தெரிவித்தார்.

Story first published: Saturday, November 13, 2021, 20:15 [IST]
Other articles published on Nov 13, 2021
English summary
Former India head coach Ravi Shastri says Virat Kohli might give up captaincy in other formats after. Ravi Shastri latest about kholi.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+