Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup 2025: கம்பீர் வந்ததில் இருந்தே அர்ஷ்தீப் சிங் நிலைமை இதுதான்.. அஸ்வின் சரமாரி விமர்சனம்

மும்பை: 2025 ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதாக வீழ்த்தியிருந்தாலும், அந்த வெற்றியை விட அணியின் தேர்வு குறித்த சர்ச்சைதான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங், பிளேயிங் 11-ல் இருந்து கழற்றிவிடப்பட்டது, கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது யூடியூப் சேனலில், "கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார்" என்று நேரடிக் குற்றச்சாட்டை முன்வைத்து விளாசி இருக்கிறார்.

Asia Cup 2025 Ravichandran Ashwin Arshdeep Singh Gautam Gambhir India Cricket

100-வது விக்கெட்டை நெருங்கிய நிலையில் நீக்கம்:

அர்ஷ்தீப் சிங், வெறும் 63 டி20 போட்டிகளில் 13.23 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவிற்காக டி20 அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கியிருந்தால், 100 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருப்பார். ஆனால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி நிர்வாகம், அவரை பெஞ்சில் அமர வைத்தது.

கம்பீர் மீது அஸ்வின் வைத்த நேரடிக் குற்றச்சாட்டு:

இந்திய அணியின் இந்த முடிவு, முன்னாள் வீரர் அஸ்வினைத் தீவிரமாக அதிருப்தி அடையச் செய்துள்ளது. தனது யூடியூப் சேனலில் போட்டி குறித்து ஆய்வு செய்த அவர், அர்ஷ்தீப் நீக்கம் குறித்து தனது காட்டமான கருத்துக்களைப் பதிவு செய்தார்.

"அர்ஷ்தீப் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் இது ஒன்றும் புதிதல்ல. கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து இது தொடர்ந்து நடந்து வருகிறது. அர்ஷ்தீப், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகவே தெரிகிறது."

"ஒருவேளை துபாய் ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். கம்பீர் கேகேஆர் அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்றபோதும், அவர் சுழற்பந்து வீச்சாளர்களை முழுமையாக நம்பித்தான் களமிறங்கினார்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.

புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை:

அஸ்வினின் குற்றச்சாட்டை உறுதி செய்வது போலவே புள்ளிவிவரங்களும் அமைந்துள்ளன. 2025-ம் ஆண்டில், அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு தொடரில் மட்டுமே விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக துபாய் பயணம் செய்திருந்தும், அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் அவர் இருந்தபோதிலும், அணியில் இல்லாத அன்ஷுல் கம்போஜ் வரவழைக்கப்பட்டு வாய்ப்பு பெற்றாரே தவிர, அர்ஷ்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அஸ்வின் எச்சரிக்கை:

நேற்றைய இந்திய அணியின் போட்டியில் சிவம் துபே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், இந்த பந்துவீச்சு கலவை (Combination) மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

"டி20 உலகக்கோப்பை வரை இதே போன்ற அணித் தேர்வு தொடரலாம். ஆனால், இந்த பந்துவீச்சு கலவை ஒரு பலமான அணிக்கு எதிராக நிச்சயம் வேலை செய்யாது. இது மிகவும் ரிஸ்க்கானது. அர்ஷ்தீப் ஒரு மிகப்பெரிய மேட்ச்-வின்னர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் அவர் அபாரமாகப் பந்துவீசினார். அவரைப் போன்ற ஒரு வீரரை நீண்ட காலம் வெளியே அமர வைப்பது கடினம். துபே சில விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், இந்த பந்துவீச்சு கலவை மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை" என்று அஸ்வின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி என மூன்று ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்களையும், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சிவம் துபே என மூன்று ஆல்-ரவுண்டர்களையும் களமிறக்கியது.

சிவம் துபேவின் வருகைதான், அர்ஷ்தீப் சிங்கின் இடத்தை நேரடியாகப் பறித்தது. சிவம் துபே அந்தப் போட்டியில் 4 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி என தனது சிறந்த டி20 பந்துவீச்சைப் பதிவு செய்து இருக்கிறார். அதனால், அர்ஷ்தீப் சிங்கின் காத்திருப்பு மேலும் நீளக்கூடும் என்பதே தற்போதைய கசப்பான உண்மையாக உள்ளது.

Story first published: Thursday, September 11, 2025, 16:24 [IST]
Other articles published on Sep 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+