“சுப்மன் கில் வெளியே போனா இவருக்கு பவுலிங் வீச வாய்ப்பு தராங்க இல்லைனா”.. அஸ்வின் ஆதங்கம்
சென்னை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு, குல்தீப் யாதவை முதன்மை சுழற்பந்து வீச்சாளராகப் பயன்படுத்துவதில் உடன்பாடில்லை என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குற்றம் சுமத்தி இருக்கிறார். சிறந்த திறமை இருந்தாலும் குல்தீப் யாதவ் அணியில் மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்மன் கில் இல்லாத போது கே எல் ராகுல் தற்காலிக கேப்டனாக செயல்படும் போது குல்தீப் யாதவுக்கு பந்து வீச வாய்ப்பு தருவதாகவும் கூறி இருக்கிறார்.
தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அஸ்வின், காலே நகரில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் நடத்தப்பட்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்தார். மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் புதுமுகமான மானவ் சுதர் ஆகியோருக்குப் பிறகு அணியின் 3வது சுழற்பந்து வீச்சாளராகவே குல்தீப் பயன்படுத்தப்பட்டதாக அஸ்வின் கூறினார். ரவீந்திர ஜடேஜாவும் மானவ் சுதரும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 20 ஓவர்களுக்கு மேல் வீசிய நிலையில், குல்தீப் யாதவுக்கு மொத்தமாகவே 25 ஓவர்கள் மட்டுமே பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில் தற்காலிகமாக மைதானத்தை விட்டு வெளியே சென்று கே.எல்.ராகுல் அணியை வழிநடத்தினார். அப்போது, அவர் உடனே குல்தீப் யாதவை பந்துவீச அழைத்ததை அஸ்வின் சுட்டிக்காட்டினார். "கேப்டன் சுப்மன் கில்லின் விருப்ப பட்டியலில் குல்தீப் யாதவ் முதன்மை தேர்வாக இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. குல்தீப்பின் சுழற்பந்து வீச்சுத் திறன் திடீரென மறைந்துவிடவில்லை. தொடர்ந்து பல போட்டிகளில் அவரை வெளியே உட்கார வைத்துவிட்டு, வாய்ப்பு தரும் போட்டிகளிலும் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பது வீரரின் தவறு அல்ல" என்று அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சமீப காலமாக அனைத்து சர்வதேச போட்டிகளிலும் குல்தீப் யாதவ் தனது இடத்தை இழந்து வருகிறார். இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஆஃப் ஸ்பின்னர் சரண்ஷ் ஜெயின் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் அஸ்வின் முன்வைத்துள்ள இந்த கருத்து முக்கியமாக பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications
