சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து, சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது அஸ்வின் தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஆனால், இப்போதும் என்ன தொகைக்கு பேரம் நடந்தது என்பது போன்ற விவரங்களை தெரிவிக்காமல், தான் எந்த விதிமீறலும் நடந்ததாக சொல்லவில்லை என மட்டுமே கூறி இருக்கிறார். மேலும், இந்த பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக ஓடிக் கொண்டு இருந்த நிலையில் அஸ்வின் தாமே முன்வந்து இந்த விளக்கத்தை முன்பே அளித்து இருக்கலாம். ஆனால், சிஎஸ்கே நிர்வாகமே விளக்கம் அளிக்கும் வரை காத்திருந்தது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், டெவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவர், "பிரெவிஸை ஒப்பந்தம் செய்ய இரண்டு, மூன்று அணிகள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், சிஎஸ்கே அணி 'கூடுதலாக' பணம் கொடுக்க முன்வந்ததால் அவர் எங்கள் அணிக்கு வந்தார்" என்று கூறியிருந்தார்.
மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யும்போது, காயமடைந்த வீரரின் சம்பளத்திற்கு மேல் கொடுக்கக் கூடாது என்பது ஐபிஎல் விதி. இதனால், அஸ்வினின் இந்தப் பேச்சு, சிஎஸ்கே அணி விதிகளை மீறியதா என்ற கேள்வியை எழுப்பி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது.
சர்ச்சை பெரிதானதை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உடனடியாக ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில், "ஐபிஎல் 2025 தொடரின்போது, காயமடைந்த வீரர் குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம், ஐபிஎல் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மிகச் சரியாகவே மேற்கொள்ளப்பட்டது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மேலும், "குர்ஜப்னீத் சிங்கின் ஏலத்தொகையான 2.2 கோடி ரூபாய்க்கு தான் டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மாற்று வீரருக்கான ஐபிஎல் விதி 6.6-ன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றும் சிஎஸ்கே விளக்கியிருந்தது.
சிஎஸ்கே அணியின் அறிக்கைக்குப் பிறகு, இந்த விவகாரம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் தனது யூடியூப் சேனலில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "எனது பழைய வீடியோவில், பிரெவிஸின் பேட்டிங் திறமையைப் பற்றி பேசுவதுதான் என் நோக்கமாக இருந்ததே தவிர, அவரது ஐபிஎல் ஒப்பந்தத் தொகையைப் பற்றி அல்ல. நான் எந்த தவறும் நடந்ததாகக் கூறவில்லை. உண்மையை மட்டுமே பேசினேன்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "யூடியூபில் நாங்கள் எங்கள் கருத்துக்களைத் தான் தெரிவிக்கிறோம். முழு வீடியோவையும் பார்க்காதவர்கள், ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு தங்களுக்குத் தோன்றியபடி திரித்துக் கூறுகிறார்கள். இன்றைய உலகில் ஒரு தலைப்புச் செய்தியை வைத்து எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும்," என்று குறிப்பிட்டார்.
மேலும், "ஒவ்வொரு வீரருக்கும் அணி நிர்வாகத்திற்கும் ஐபிஎல்லுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. அதில் ஏதேனும் தவறு இருந்தால், அது ஒருபோதும் அனுமதிக்கப்படாது. பிரெவிஸ் ஒரு மிகச்சிறந்த வீரர், சிஎஸ்கே அணிக்கு கிடைத்த ஒரு தங்கம் அவர். அவரது பேட்டிங் அபாரமாக இருக்கிறது. நான் அதைத்தான் கூற வந்தேன்," என்று அஸ்வின் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.