சென்னை: சமீபத்தில் 2025 ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த 13 நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. நடிகர் அஜித் குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு பத்ம பூஷன் விருதும், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் அஸ்வினுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில் "தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இதைவிட சிறந்த முன்னுதாரணத்தை நாம் கேட்க முடியாது. நீங்கள் இந்த விருதை பெற தகுதியான நபர்." என சுப்ரமணியம் பத்ரிநாத் கூறி இருந்தார்.

ஆனால், தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் அஸ்வின் என அவர் குறிப்பிட்டது தவறு என முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய மகளிர் அணி பயிற்சியாளருமான டபிள்யூ வி ராமன் கூறி இருக்கிறார். இது பற்றி அவர் அளித்து இருக்கும் பதிலில், "தமிழ்நாட்டில் இருந்து பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் வெங்கட்ராகவன்" என விளக்கம் அளித்து இருக்கிறார்.
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் ஒன்றாக பந்து வீசி ஆசிய கண்ட சூழ்நிலைகளில் எதிரணிகளை திணறடித்து வந்தனர். அந்த நால்வரில் ஒருவராக இருந்தவர் தான் ஸ்ரீனிவாசராகவன் வெங்கட்ராகவன். அவர் அதன் பின்னர் அம்பயர் மற்றும் மேட்ச் ரெப்ரீ ஆகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 15 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அம்பயர் மற்றும் ரெப்ரீயாக 79 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 78 ஒரு நாள் போட்டிகளில் செயல்பட்டு இருக்கிறார்.
கிரிக்கெட்டில் வெங்கடராகவனின் பங்களிப்பை பாராட்டி 2003 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை சேர்ந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பத்மஸ்ரீ விருதை வென்று இருக்கிறார். அந்த தகவலை தான் சுப்ரமண்யம் பத்ரிநாத் மாற்றி கூறி இருக்கிறார்.