மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். அது பற்றி பல்வேறு ஊகங்கள் இருந்தன. அவர் ஏன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாதியிலேயே ஓய்வை அறிவித்தார்? இந்திய அணி நிர்வாகம் அவரை புறக்கணித்தது தான் காரணமா? என பல்வேறு ஊகங்கள் எழுந்தன.
அஸ்வினின் தந்தை கூட அவர் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக கூறி இருந்தார். ஆனால். அவரது தந்தையின் பேச்சு உட்பட அனைத்து ஊகங்களையும் மறுத்ததோடு, ஓய்வு குறித்து தனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என தெளிவாக கூறினார் அஸ்வின்.

அதே சமயம், அவரது ஓய்வுக்கு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி அவரே ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். அது மிகவும் நெகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. 2012 - 13 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது.
அப்போது இந்திய அணியில் அஸ்வினும் இடம் பெற்று இருந்தார். அந்த தோல்வி அப்போதைய இந்திய அணி வீரர்களை கடுமையாக பாதித்தது. அப்போது அஸ்வின் தனக்கு தானே ஒரு சத்தியத்தை செய்ததாக தற்போது கூறி இருக்கிறார். அந்த சத்தியத்தை மீறியதாலேயே தற்போது ஓய்வையும் அவர் அறிவித்து இருப்பதாக மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.
தனது ஓய்வு முடிவு குறித்து அஸ்வின் பேசுகையில் இந்த விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது பற்றி அஸ்வின் பேசியது - "நான் எங்கே இருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. உண்மையில் நான் 2012ல் ஒரு சத்தியத்தை எனக்கு நானே செய்தேன். நாங்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு தொடரை இழந்தோம். அது சவாலானதாக இருந்தது."
"அப்போதுதான் நான் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடத் துவங்கி இருந்தேன். இனி இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்கக்கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்." என்றார் அஸ்வின். அப்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது.
இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி ஒரு முறை கூட சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. மேலும், இந்திய மண்ணில் நடந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வின் இடம் பெற்று ஆடினார். இந்திய அணியின் சொந்த மண் ஆதிக்கத்துக்கு அவரும் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கக் கூடாது என்ற அவரது சத்தியம் நியூசிலாந்து டெஸ்ட் தொடருடன் முடிவுக்கு வந்ததை அடுத்து ஓய்வு முடிவை எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் நெகிழ்ச்சியான முடிவையே எடுத்து இருக்கிறார் என தெரிய வந்துள்ளது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், டி என் பி எல் டி20 தொடர் போன்ற உள்ளூர் தொடர்களிலும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.