சென்னை : இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து ஆட வைத்த தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் அஸ்வின் விசுவாசமாக இல்லை என அதன் பின்னணியை விளக்கி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
அஸ்வினுக்கு எதிராக ட்விட்டரில் பல அதிரடி கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் முன்னாள் இந்திய அணி வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.

அஸ்வின் இந்தியாவில் பிட்ச்களை சேதம் செய்தே அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். வெளிநாடுகளில் அவர் அதிக விக்கெட் வீழ்த்தாத காரணமே இதுதான் எனவும், அஸ்வின் ஒவ்வொரு போட்டியின் போதும் தானே மைதான ஊழியர்களிடம் சென்று பிட்ச்சை எந்த இடங்களில் சேதம் செய்ய வேண்டும் என கூறுவார் என்றும் கூறி இருக்கிறார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
அதன் பின் அவர் தோனி, சிஎஸ்கே அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு அஸ்வின் துரோகம் செய்ததாக ஒரு பதிவு ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார். அதில் உள்ள சில விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
"சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி இல்லையென்றால் அஸ்வின் இந்திய அணிக்குள் நுழைந்தே இருக்க முடியாது. காரணம், அப்போது ஹர்பஜன் சிங் நன்றாக பந்து வீசி வந்தார். அஸ்வின் அவர்கள் ஆதரவுடன் அணியில் இடம் பெற்று ஆடினார். அதன் பின் இந்தியா சிமெண்ட் கம்பெனியை விட்டு, அதன் எதிரி கம்பெனியான கெம்பிளாஸ்டில் சென்று சேர்ந்து விட்டார். இந்த பெரிய மனிதரிடம் எத்தனை விசுவாசம். நீங்கள் அவருக்கு கோவில் தான் கட்ட வேண்டும்." என லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
இந்த பதிவில் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் என்ன சொல்ல வருகிறார் என்றால், 2007-08 கால கட்டத்தில் இந்தியா சிமெண்ட் நிறுவன அதிபர் சீனிவாசன் பிசிசிஐ-யில் அதிகாரமிக்க நபராக இருந்தார். அப்போது தான் தோனியும் கேப்டன் ஆனார்.
அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் உதவியதால் மட்டுமே அஸ்வின், ஹர்பஜன் சிங்கை தாண்டி இந்திய அணியில் நுழைய முடிந்தது என கூறி இருக்கிறார். மேலும், அப்போது அஸ்வின் இந்தியா சிமெண்ட் நிறுவன ஸ்பான்சர் பெற்ற வீரராக இருந்தார். ஆனால், இந்திய அணியில் இடம் கிடைத்த பின் அவர் விசுவாசமே இல்லாமல் எதிரி கம்பெனிக்கு மாறி விட்டார் என கூறி இருக்கிறார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
அதன் பின், "ஒரு மாநிலத்தின் முழு குறைந்த ஓவர் போட்டித் தொடர் முழுவதும் லெக் ஸ்பின்னர்கள் மட்டுமே ஆட வைக்கப் பட்டார்கள் (அஸ்வினை அணியில் தேர்வு செய்ய வைக்க). வேறு யாராக இருந்தாலும் தூக்கி வீசி இருப்பார்கள்." எனக் கூறி அஸ்வினுக்காக பின்னணியில் என்னவெல்லாம் நடந்துள்ளது என்ற ரகசியத்தை போட்டு உடைத்து இருக்கிறார்.