சென்னை: 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் குறித்த பேச்சுகள் இப்போதே தொடங்கிவிட்டது. அதற்கு ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் டிரேட் மற்றும் அஸ்வினின் விளக்கம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் கடைசி 2 இடங்களை பிடித்த 2 அணிகளும், இம்முறை கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.
சிஎஸ்கே அணி தரப்பில் அஸ்வின் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரையும் கொடுத்துவிட்டு ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்க விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் ராஜஸ்தான் அணி நிர்வாகிகளுக்கும், சஞ்சு சாம்சனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதால், அவரை ரிலீஸ் செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் மினி ஏலத்தை பொறுத்தவரை இளம் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு கிராக்கி இருக்கும். பெரும்பாலான இந்திய அணி வீரர்கள் மினி ஏலத்திற்கு வர மாட்டார்கள். ஒருவேளை இந்திய அணிக்காக ஆடிய வீரர்கள் மினி ஏலத்திற்கு வந்தால், அவருக்கு நிச்சயம் ஜாக்பாட் தான். அதேபோல் ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு அதிக தொகை கிடைக்கும்.
ஹர்திக் பாண்டியா, பேட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பென் ஸ்டோக்ஸ், ரஸ்ஸல் உள்ளிட்டோர் அதிக தொகையை பெற்றுள்ளனர். இந்த நிலையில் அடுத்ததாக நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் 2 வீரர்களுக்கு மிகப்பெரிய கிராக்கி இருக்கும் என்று இந்திய ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதன்படி அஸ்வின் பேசுகையில், மினி ஏலத்தில் இந்திய அணி வீரர்கள் கிடைப்பது அரிதனும் அரிதான விஷயம். புதிய இளம் வீரர்களை மட்டும் வாங்க முடியும். ஒரு பெரிய வீரரை ரிலீஸ் செய்துவிட்டு மீண்டும் வாங்குவதே என்பதே மிகப்பெரிய ரிஸ்க். அதேபோல் இந்த மினி ஏலத்தில் ஏராளமான ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் பங்கேற்பார்கள்.
அவர்களில் 2 முக்கிய ஆல்ரவுண்டர்கள் பணத்தை வாரி சுருட்டப் போகிறார்கள். அதில் முதல் வீரர் கேம்ரூன் க்ரீன். 2வது வீரர் மிட்சல் ஓவன். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இவர்கள் இருவரும் மிகப்பெரிய தொகைக்கு செல்வார்கள். மிட்சல் ஓவன் கடந்த ஆண்டிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். கேமரூன் க்ரீன் காயம் காரணமாக ஏலத்தில் பங்கேற்கவில்லை. இம்முறை மீண்டும் ஏலத்திற்கு வருவார்.
அதனால் வெளிநாட்டு ஆல்ரவுண்டரை வாங்க விரும்புவோர் நிச்சயம் அதிக தொகைக்கு வாங்க முன் வருவார்கள். அதேபோல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ரூ.25 முதல் ரூ.30 கோடி வரையிலான பர்ஸ் தொகையை கையில் வைத்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் கேமரூன் க்ரீனை சிஎஸ்கே அணி வாங்க வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.