சென்னை: இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், ஆடம் கில்கிறிஸ்ட் நல்ல பேட்ஸ்மேன் இல்லை என்று கூறியிருக்கிறார். இது கிரிக்கெட் உலகில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது குறித்த உண்மையை அறிய ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் டெஸ்ட் புள்ளி விவரங்களை ஒப்பிட்டு அஸ்வின் சொன்னது உண்மையா? என ஆய்வு செய்து இருக்கிறோம்.
இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் இருக்கிறார். எனினும், அவரது ஆட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவர் அதிரடியாக ஆடுவது நல்லதுதான் என்றாலும், அணியின் நலன் கருதி சில நேரங்களில் அவர் தனது விக்கெட்டை பாதுகாத்தும் ஆட வேண்டும் என்ற கருத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் முன்வைத்தார்.
அவ்வாறு பேசிய அஸ்வின் இடையே, "இனியும் நாம் ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடக் கூடாது. ஆடம் கில்கிறிஸ்ட்டிடம் நல்ல தடுப்பாட்டம் இல்லை" என்று கூறினார். ஆடம் கில்கிறிஸ்ட்டை விட ரிஷப் பண்ட் சிறந்த பேட்ஸ்மேன்; இனி அவரை மற்ற சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுடன் தான் நாம் ஒப்பிட்டுப் பேச வேண்டும் என்றும் அஸ்வின் கூறி இருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய முழு பேச்சு: "ரிஷப் பண்ட்டை அவரது அதிகபட்ச திறனுடன் பார்க்க நான் விரும்புகிறேன். அவர் நம்மை மகிழ்விக்கிறார். ஆனால், எப்போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமோ அப்போது அதைச் செய்ய வேண்டும். ரிஷப் பண்ட் இனியும் புதியவர் இல்லை. அவருக்கான இடத்தை உயர்த்தி பார்க்க வேண்டும். அவர் அற்புதமான வீரர். ரிஷப் பண்ட் ஆடம் கில்கிறிஸ்ட் இல்லை. பலரும் அவரை கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடுகிறார்கள். கில்கிறிஸ்ட்டிடம் தடுப்பாட்டம் இல்லை. ஆனால், ரிஷப் பண்ட்டிடம் மிகவும் தரமான தடுப்பாட்டம் இருக்கிறது. எனவே, அவரை சிறந்த பேட்ஸ்மேன்களுடன் தான் நாம் ஒப்பிட வேண்டும், கில்கிறிஸ்ட்டுடன் அல்ல" என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.

அதாவது, ஆடம் கில்கிறிஸ்ட்டை விட ரிஷப் பண்ட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதாக அவர் பேசி இருக்கிறார். ஆனால், புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் ஆடம் கில்கிறிஸ்ட் தான் ரிஷப் பண்ட்டை விட சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
96 டெஸ்ட் போட்டிகளில் 137 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 5570 ரன்கள் எடுத்திருக்கிறார்.
அவரது பேட்டிங் சராசரி 47.6 என்பதாக இருக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 81.95 என்பதாக இருக்கிறது.
அவர் 17 சதம் மற்றும் 26 அரை சதங்களை அடித்து இருக்கிறார்.
137 இன்னிங்ஸ்களில் 20 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார்.
தனது சொந்த மண்ணான ஆஸ்திரேலியாவில் 45 என்ற பேட்டிங் சராசரியில் ரன் சேர்த்துள்ளார். வெளிநாடுகளில் 50.24 என்ற பேட்டிங் சராசரியில் ரன் சேர்த்து இருக்கிறார்.
ஆடம் கில்கிறிஸ்ட் போலவே அதிரடியாக பேட்டிங் செய்து வரும் ரிஷப் பண்ட்டின் டெஸ்ட் பேட்டிங் செயல்பாட்டை எடுத்துப் பார்த்தால், அவர் 45 போட்டிகளில் 79 இன்னிங்ஸ்களில் 3290 ரன்கள் எடுத்திருக்கிறார்.
ரிஷப் பண்ட்டின் பேட்டிங் சராசரி 44.45.
டெஸ்ட் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 74.4 என்பதாக உள்ளது.
8 சதம் மற்றும் 16 அரைசதங்களை அடித்திருக்கிறார்.
79 இன்னிங்ஸ்களில் ஐந்து முறை மட்டுமே நாட் அவுட் ஆக இருந்துள்ளார்.
இந்திய மண்ணில் 55.84 என்ற பேட்டிங் சராசரியில் ரன் சேர்த்து இருக்கிறார். வெளிநாடுகளில் 41.2 என்ற பேட்டிங் சராசரியில் ரன் சேர்த்து இருக்கிறார்.
இவர்கள் இருவரின் டெஸ்ட் பேட்டிங் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஆடம் கில்கிறிஸ்ட்டின் பேட்டிங் சராசரி ரிஷப் பண்ட்டை விட அதிகமாகவே உள்ளது. மேலும், டெஸ்ட் போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் ரிஷப் பண்ட்டை விட அதிகமாகவே உள்ளது.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஆடம் கில்கிறிஸ்ட் 137 இன்னிங்ஸ்களில் 20 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். ரிஷப் பண்ட் 79 இன்னிங்ஸ்களில் ஐந்து முறை மட்டுமே நாட் அவுட் ஆக இருந்துள்ளார். இதை வைத்துப் பார்த்தால், கில்கிறிஸ்ட் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்; தனது விக்கெட்டை எளிதாக பறி கொடுக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
மேலும், கில்கிறிஸ்ட் சொந்த மண்ணை விட வெளிநாடுகளில் சிறந்த பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். ஆனால், ரிஷப் பண்ட் இந்திய மண்ணில் சிறப்பாகவும் (55.84 சராசரி), வெளிநாடுகளில் ஓரளவு நல்ல பேட்டிங் சராசரி (41.2 சராசரி) என சொல்லும் அளவுக்கும் தான் ஆடி இருக்கிறார்.
எந்த வகையில் பார்த்தாலும் ஆடம் கில்கிறிஸ்ட்டின் டெஸ்ட் பேட்டிங் ரிஷப் பண்ட்டை விட சிறப்பானதாகவே இருந்துள்ளது. ஆனால், அஸ்வின் எதை வைத்து சிறந்த வீரர் என்று சொல்கிறார் என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக உள்ளது. ரிஷப் பண்ட் மற்ற இந்திய பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடும்போது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை.
விராட் கோலி அளவுக்கு இல்லை என்றாலும், மற்ற பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடும்போது ரிஷப் பண்ட் நிச்சயம் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்தான். ஆனால், ஆடம் கில்கிறிஸ்ட்டை விட அவர் சிறந்த வீரர் இல்லை என்பதுதான் இப்போதைய உண்மை. வரும் காலத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி கில்கிறிஸ்ட்டை விட சிறந்த வீரராக அதிக சராசரி மற்றும் பிற செயல்பாடுகளை அளிக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.