IND vs AUS: நான் ஓய்வை அறிவிக்க காரணமே இதுதான்.. உண்மையை உடைத்த அஸ்வின்.. எந்த சர்ச்சையும் இல்லை
சென்னை: இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியிலேயே அவர் ஓய்வை அறிவித்து, அணியில் இருந்து விலகி இருந்தார். அதற்கு என்ன காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் அஸ்வின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் என்ற இங்கிலாந்து ஊடகத்திற்கு இது குறித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் தனது ஓய்வுக்கான காரணம் என்ன என விளக்கத்தையும் அளித்து இருக்கிறார். தனது ஓய்வில் எந்த சர்ச்சையும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

தனது ஓய்வு பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ்-இடம் அஸ்வின் பேசியது - "நான் எப்போதும் ஒரே விஷயத்தை பிடித்துக் கொண்டு இருப்பதில்லை. என் வாழ்வில் நான் பாதுகாப்பற்றவனாக உணர்ந்ததில்லை. இன்று எது எனது ஆக இருக்கிறதோ, நாளை அது எனதாக இருக்கும் என்பதை நான் நம்புவதில்லை."
"நான் எப்போதும் எனக்கான விஷயங்களை விட்டுவிட்டு செல்வவே விரும்புகிறேன். மக்கள் என்னை கொண்டாடுவதையும் நான் நம்புவதில்லை. இந்தியாவில் சில சமயம் மக்களின் கவனத்தை ஈர்க்காமல் இருப்பது நல்லது என நான் நம்புகிறேன். என்னை தாண்டி எனது விளையாட்டு தான் எப்போதுமே முன்னிலையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்."
"நான் எனது ஓய்வு பற்றி இதற்கு முன்பும் சில சமயம் யோசித்து இருக்கிறேன். நான் ஒரு நாள் நான் எழுந்து பார்க்கும் போது எனக்குள் இருக்கும் படைப்பாற்றலுக்கு எதிர்காலமோ, அது முன்னேறி செல்வதற்கான இடம் இல்லை என்று தெரிந்தால் அன்று தான் நான் ஓய்வு பெற வேண்டும் என நினைத்தேன்."
"நான் திடீரென எனக்குள் இருக்கும் படைப்பு திறனுக்கு முன்னேறிச் செல்வதற்கு இடமில்லை என்பதை உணர்ந்தேன்." இவ்வாறு அஸ்வின் கூறி இருக்கிறார். இதன் மூலம் தனது படைப்பாற்றலுக்கு முன்னேறி செல்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதாலேயே ஓய்வு பெற்றதாக விளக்கம் அளித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications