சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பயிற்சியின்போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் (BBL) மற்றும் ஹாங்காங் சிக்ஸஸ் ஆகிய முக்கியத் தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தச் செய்தி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஓய்வுக்குப் பிறகு பிக் பேஷ் லீக் (BBL) மற்றும் ஹாங்காங் சிக்ஸஸ் ஆகிய முக்கியத் தொடர்களில் பங்கேற்க இருந்தார். ஆனால், எதிர்பாராத இந்தக் காயம் அவரது பங்கேற்புக்கு முடிவு கட்டி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரபலமான டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் 15-வது சீசனில், சிட்னி தண்டர் அணிக்காக அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவின் டி20 தொடரில் ஆடப் போகும் முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற இருந்தார் அஸ்வின். இந்த நிலையில், தனது விலகல் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
"அன்பான தண்டர் நேஷன் ரசிகர்களே, இதை நானே எழுத விரும்பினேன். வரவிருக்கும் சீசனுக்காகச் சென்னையில் தயாராகிக் கொண்டிருந்தபோது, என் முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக ஒரு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அதன் காரணமாக, பிக் பேஷ் லீக் 15-வது சீசனை நான் இழக்க நேரிடும். இதைச் சொல்வது கடினமாக உள்ளது. இந்த அணியில் ஒரு பகுதியாக இருப்பதற்கும், உங்கள் முன் விளையாடுவதற்கும் நான் உண்மையிலேயே உற்சாகமாக இருந்தேன்.
தற்போதைக்கு, காயத்தில் இருந்து மறுவாழ்வு, மீட்பு, மீண்டும் களத்துக்கு திரும்புவதற்கான பணிகளில் கவனம் செலுத்த உள்ளேன். உங்களின் அன்புக்கு நன்றி. சிட்னி தண்டர் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்" என்று அஸ்வின் பதிவிட்டுள்ளார்.
சிட்னி தண்டர் அணியின் அதிகாரி டிரென்ட் கோப்லாண்ட் கூறுகையில், "அஸ்வினின் காயம் குறித்த செய்தி எங்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். அவரை எங்கள் அணியில் வரவேற்பதற்கும், ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் ஆவலுடன் இருந்தோம்" என்றார்.
இதேபோல், வரும் நவம்பர் 7 முதல் 9 வரை ஹாங்காங்கில் நடைபெறவுள்ள விறுவிறுப்பான ஹாங்காங் சிக்ஸஸ் தொடரிலிருந்தும் அஸ்வின் விலகியுள்ளார்.
"காயம் காரணமாக இந்த ஆண்டு ஹாங்காங் சிக்ஸஸ் தொடரைத் தவறவிடுவதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம். அந்தத் தொடரின் தனித்துவமான வடிவத்தையும், அதன் ஆற்றலையும் அனுபவிக்க ஆவலுடன் இருந்தேன். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.
அஸ்வினுக்குப் பதிலாக, முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், இந்தத் தொடரின் மூலம் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் அவரைத் தடுத்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த உத்தப்பா, இந்த ஆண்டும் அணிக்குத் திரும்புகிறார். தனது அதிரடியான பேட்டிங்கிற்குப் பெயர் பெற்ற அவர், கடந்த ஆண்டு ஓமன் அணிக்கு எதிராக 13 பந்துகளில் 52 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஸ்டூவர்ட் பின்னி, அபிமன்யு மிதுன், பரத் சிப்லி, ஷாபாஸ் நதீம், பிரியங்க் பன்சால் ஆகியோருடன் ராபின் உத்தப்பாவும் இணைந்துள்ளனர்.
ஆறு வீரர்கள், ஆறு ஓவர்கள் என விறுவிறுப்பாக நடைபெறும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடர், பெரிய சிக்ஸர்களுக்கும், அதிரடியான ஆட்டத்திற்கும் பெயர் பெற்றது. அஸ்வின் விலகியிருப்பது அணிக்குப் பின்னடைவாக இருந்தாலும், உத்தப்பாவின் வருகை பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.