“தோனியால் தான் பிரச்சனையே”.. சிஎஸ்கே அடுத்த பயிற்சியாளரை தேடுவதில் சிக்கல்.. அஸ்வின் பேச்சு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில், தோனியால் பெரும் குழப்பமும் சிக்கலும் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் 17 ஆண்டு கால பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்குபுதிய பயிற்சியாளரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்துப் பேசிய அஸ்வின், "சிஎஸ்கே அணியில் பிளெமிங் தலைமை பயிற்சியாளராக இருந்தாலும், தோனி தான் எப்போதும் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முதன்மை நபராக இருந்தார். பிளெமிங் அவருக்குத் துணையாக மட்டுமே செயல்பட்டார்.
தற்போது புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய உள்ள நிலையில், தோனியே அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கிறாரா என்பதில் சிஎஸ்கே நிர்வாகத்திற்குத் தெளிவு வேண்டும். தோனி பயிற்சியாளராக வர சம்மதித்தால், அவரை விடச் சிறந்த நபர் சிஎஸ்கே-வுக்குக் கிடைக்க மாட்டார். ஆனால், அதற்கு அவர் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற வேண்டும். காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் விளையாடாத தோனி, இன்னும் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை" என்றார்.
மேலும் பேசிய அஸ்வின், "தோனிக்குத் துணையாக இருந்து, அவர் சொல்வதைக் கேட்டு வேலைகளைச் செய்யும் ஒருவரைக் கோச்சாக சிஎஸ்கே அணி தேடுகிறதா? அல்லது தோனிக்கு இணையாகத் தனித்து நின்று முடிவெடுக்கும் ஒரு புதிய பயிற்சியாளரைத் தேடுகிறதா என்பதில் தெளிவு வேண்டும். சிஎஸ்கே இனிவரும் காலங்களில் தோனியின் வழிகாட்டுதலில் மட்டுமே இயங்கும் அணியாக இருக்கப் போகிறதா அல்லது புதிய பயிற்சியாளர் தனது விருப்பப்படி அணியை வழிநடத்தப் போகிறாரா என்பதைச் சிஎஸ்கே நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
புதிய பயிற்சியாளர் தேர்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தோனியின் எதிர்காலத் திட்டங்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அஸ்வின் கூறி இருக்கிறார். அஸ்வின் கூறுவது போல தோனி பயிற்சியாளராக வாய்ப்பு இல்லை என்றும், அவர் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக மட்டுமே செயல்பட இருப்பதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications

