மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜாவை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என அஸ்வின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாமல் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சரியான கேப்டனை நியமிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இனி நிரந்தரமாக விளையாடும் ஒரு கேப்டனைத்தான் நியமிக்க வேண்டும் என்பதில் இந்திய அணி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.

ஜஸ்பிரித் பும்ராவுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகச் சுட்டிக்காட்டி, அவருக்கு இனி கேப்டன் பதவி அளிக்கப்படாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான் சுப்மன் கில் முக்கியத்துவம் பெற்று இருக்கிறார். ஆனால், அவருக்குப் போதிய அனுபவம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அஸ்வின் ஜடேஜா அல்லது பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இது பற்றி அஸ்வின் பேசுகையில்: "ஜடேஜா தான் இப்போது இருக்கும் அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவரை கேப்டனாக்குவது பற்றியும் பேச வேண்டும். நீங்கள் புதிய கேப்டனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தயார் செய்யப் போகிறீர்கள் என்றால், அதுவரை ஜடேஜாவை கேப்டனாக நியமியுங்கள். ஜடேஜா இரண்டு ஆண்டுகளுக்கு நிச்சயம் கேப்டனாகச் செயல்படுவார். புதிய கேப்டனாகத் தேர்வு செய்பவரை, ஜடேஜாவுக்குக் கீழ் துணை கேப்டனாக நியமனம் செய்யுங்கள்.
குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் பிளேஆஃப்புக்கு முன்னேறும் என்று நம்புகிறேன். சுப்மன் கில் அங்கு மரியாதையைப் பெற்றால், அவர் அணியின் கேப்டனாக மாறுவதற்கு அது எளிதாக இருக்கும். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருப்பதற்கு ஒரு நல்ல சீசன் மட்டுமே போதாது. முதல் தர கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதையும் ஒரு கேப்டன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்" எனக் கூறினார். ஏனெனில், சுப்மன் கில் அதிக முதல் தர போட்டிகளில் விளையாடவில்லை என்பதைத்தான் அஸ்வின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.