ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சே..டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்யும் சூப்பர் சாதனை..கபில்-க்கு பின் இவர்தான்
சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட வருடங்களாக செய்ய முடியாமல் இருந்த சாதனையை நிகழ்த்தவுள்ளார்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி
பேட்டிங்கிற்கு கடினமாக இருந்த இந்த பிட்ச்-ல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே கைவிட்டதால் 300 ரன்களையாவது அடிக்குமா என்று நினைத்த போது, அஸ்வினின் இன்னிங்ஸால் இந்தியா 400 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய அவர் 113 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 58 ரன்களை விளாசினார். இவரும் - குல்தீப் யாதவும் சேர்ந்து 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சூப்பர் சாதனை
இந்நிலையில் சிறப்பாக விளையாடியும் ஒரு முக்கிய சாதனையை அஸ்வின் தவறவிட்டுள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 442 விக்கெட்களை இதுவரை கைப்பற்றியுள்ளார். இன்று பேட்டிங்கில் கூடுதலாக 11 ரன்களை அடித்திருந்தால் சர்வதேச டெஸ்டில் 400 விக்கெட்கள் மற்றும் 3000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.

முதல் நபர் யார்
இந்த சாதனையை முதன்முதலாக இந்திய முன்னாள் வீரர் கபில் தேவ் செய்திருந்தார். அவர் 5,248 ரன்களை அடித்தும், 434 விக்கெட்களை வீழ்த்தியும் இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது 442 விக்கெட்கள் மற்றும் 2989 ரன்களை அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் தவறவிட்ட அவர், 2வது இன்னிங்ஸில் வெறும் 11 ரன்களை அடித்துவிட்டால் போதுமானது ஆகும்.

அஸ்வினின் மாஸ்டர் ப்ளான்
36 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது மிகவும் இக்கட்டான சூழல்களில் காப்பாற்ற வந்துவிடுவதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுவரை 13 அரைசதங்களும், 5 சதங்களும் அடித்துள்ளார். மொத்தமாக அடித்த 2,989 ரன்களில் பெரும்பாலானவை 8வது இடத்தில் களமிறங்கி அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications