சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தன் துருப்புச் சீட்டை களமிறக்கி உள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தான் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி முடிவை எடுத்து இந்த உலகக்கோப்பை தொடரின் துருப்புச்சீட்டை ஆட வைத்தார்.
அந்த துருப்புச்சீட்டு வேறு யாரும் இல்லை, நம் அஸ்வின் தான். இதற்கு மூன்று முக்கிய காரணம் உள்ளது. அஸ்வின் ஆடினால் அது ஆஸ்திரேலியாவை பல வழிகளில் பாதிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தார்.

முதல் முக்கிய காரணம், பிட்ச் தான். இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடைபெற உள்ள பிட்ச் முற்றிலுமாக ஸ்பின் பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கும். அதற்கேற்ப இந்தியா அணித் தேர்வை செய்தது.
முதலில் இந்திய அணி ஜடேஜா, குல்தீப் யாதவ் என இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்த்த நிலையில், மூன்றாவதாக அஸ்வினையும் களமிறக்கி உள்ளது.
இரண்டாவது காரணம், சென்னை சேப்பாக்கம் மைதானம் அஸ்வினுக்கு பழக்கப்பட்ட மைதானம். இங்கே தான் அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடி இருக்கிறார். எனவே, சென்னை சூழ்நிலையை அஸ்வின் பயன்படுத்திக் கொள்வார்.
மூன்றாவது காரணம், பிட்ச்சை தவிர, ஆஸ்திரேலிய அணியின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் சிம்ம சொப்பனமாக இருப்பார். அதிலும் டேவிட் வார்னர் நிச்சயம் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்க ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பது, வலது கையில் ஆடுவது என கோக்குமாக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்க்கலாம்.
குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்வது ஒருபுறம் என்றால் மறுபுறம் அஸ்வினின் புது விதமான பந்துவீச்சை எதிர்கொள்ளவும் ஆஸ்திரேலியா தயாராக வேண்டும்.
கேப்டன் ரோஹித் சர்மா தன் துருப்புச்சீட்டு அஸ்வின் தான் என்பதை இந்தப் போட்டியில் காட்டி இருக்கிறார். அஸ்வின் இந்தப் போட்டியில் செயல்படுவதை வைத்தே மற்ற உலகக்கோப்பை போட்டிகளில் அவரது வாய்ப்பு அமையும்.
மேலும், துவக்க வீரர் சுப்மன் கில் காய்ச்சலால் ஓய்வில் இருக்கும் நிலையில், அவருக்கு பதில் மாற்று வீரராக அணியில் இருக்கும் இஷான் கிஷன் இந்தப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கினார். பாண்டியாவுக்கும் பயிற்சியின் போது லேசான காயம் ஏற்பட்டது. ஆனாலும் அவரும் போட்டியில் இடம் பெற்று இருக்கிறார்.