பந்தை சேதப்படுத்தினாரா ஜடேஜா??.. வீடியோ வெளியானதால் புதிய சர்ச்சை.. முதல் டெஸ்டில் என்ன நடந்தது??
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோவும் பரவி வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து பெரும் ஏமாற்றத்தை பெற்றது.
அந்த அணியில் மார்னஸ் லபுனேஸ் (49), ஸ்டீவ் ஸ்மித் (37), அலெக்ஸ் கேரி (36) ஆகியோர் மட்டும் ஓரளவிற்கு ரன்களை சேர்க்க, மற்ற அனைவரும் மோசமாக சொதப்பினர். இதனால் வெறும் 177 ரன்களுக்கெல்லாம் அந்த அணி ஆல் அவுட்டானது.

ஜடேஜா அசத்தல்
இந்திய அணியின் பவுலிங்கில் அனைவரின் கவனமும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது தான் இருந்தது. ஆனால் டாப் ஆர்டரை முழுவதுமாக சரித்து ஆச்சரியம் தந்தார் ரவீந்திர ஜடேஜா. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர், 22 ஓவர்களை வீசி 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதில் 8 ஓவர்கள் முழுவதும் மெய்டன் ஓவர்கள் ஆகும். இதனால் இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் நல்ல பலன் கிடைத்தது.

புது சர்ச்சை
இந்நிலையில் ஜடேஜா விதிமீறல் செய்தாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸின் போது, ரவீந்திர ஜடேஜா பந்து வீசும் முன் திடீரென முகமது சிராஜை நோக்கி வேகமாக சென்றார். அங்கு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென சிராஜ் தனது கையை நீட்டினார். அவரின் கையில் இருந்து திரவம் போல எதையோ எடுத்துக்கொண்ட ஜடேஜா அதனை தனது விரல்களில் பூசிக்கொண்டார்.

உண்மை காரணம் என்ன
அதாவது இடதுகை பவுலரான ஜடேஜா எந்தெந்த விரல்களில் பந்தை டேர்ன் செய்கிறாரோ அங்கு மட்டும் அதனை தடவிக்கொண்டார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலிய ஊடகங்கள் இதனை விதிமீறல் என்ற கோணத்தில் விமர்சித்து வருகின்றன. ஆனால் பந்தை நன்கு வழுக்கிக்கொண்டு செல்லாமல், கிரிப்பாக இருப்பதற்காக அந்த மருந்தை தனது கையில் பூசினார். இது விதிமுறைக்கு உட்பட்டது தான் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

மைக்கேல் வாகன் ட்வீட்
இது குறித்து ட்வீட் போட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஜடேஜா தனது விரலில் என்ன பூசிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு இதுபோன்று பார்த்ததே கிடையாது என பதிவிட்டுள்ளார். இதனால் புதிய விஷயத்தை எதையோ ஜடேஜா பயன்படுத்துகிறாரா?, அவர் செய்தது சரிதானா என்ற கோணத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications