இரட்டை வேஷம் போடுகிறார்.. தந்தைக்கு எதிராக பேசிய ஜடேஜா.. கிழித்து தொங்க விடும் ரசிகர்கள்
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தன் தந்தையின் பேட்டிக்கு மறுப்பு தெரிவித்து காட்டமாக வெளியிட்ட பதிவால் அவர் மீது பல ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அவர் 12 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரின் காலில் தினமும் விழ வேண்டும் என கூறி இருந்த ட்விட்டர் பதிவை தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
ரவீந்திர ஜடேஜாவின் தந்தை இரு நாட்கள் முன்பு திவ்யா பாஸ்கர் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ஜடேஜாவுக்கு திருமணமான மூன்றாவது மாதமே அவரது மனைவி ரிவாபா குடும்பத்தை பிரித்து விட்டார் எனவும், சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றுமாறு கூறினார் எனவும் கூறி இருந்தார்.

மேலும், தன் மகன் ரவீந்திர ஜடேஜாவுடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிறது எனவும், தன் பேத்தியை கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் பார்க்கவில்லை எனவும் அதிர வைக்கும் விஷயங்களை கூறி இருந்தார் அவரது தந்தை. ரவீந்திர ஜடேஜாவின் மனைவி குறித்தே இந்தப் பேட்டியில் அவர் தந்தை அதிகம் பேசி இருந்த நிலையில், இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களில் ஜடேஜா தன் ட்விட்டர் பக்கத்தில், அது போலியான பேட்டி எனவும், அதில் கூறி இருந்த கருத்து எதுவும் உண்மையில்லை எனவும், தன் மனைவியின் நற்பெயரை களங்கப்படுத்த முயல்வதை தன்னால் ஏற்க முடியாது எனவும் கூறி இருந்தார். தன் தந்தைக்கு எதிராகவே அவர் கடும் எதிர்வினை ஆற்றி இருந்தார்.
இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்வதற்கு எல்லாம் முன்னால் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், "எவர் ஒருவர் தினமும் தன் பெற்றோரின் கால்களை தொட்டு வணங்குகிறாரோ, அவர் வாழ்க்கையில் எப்போதும் வேறு யார் கால்களையும் தொட வேண்டிய நிலை ஏற்படாது" எனக் கூறி இருக்கிறார்.
அந்த பதிவை தற்போது மீண்டும் பகிர்ந்து வரும் ரசிகர்கள், ரவீந்திர ஜடேஜா இரட்டை வேஷம் போடுகிறார், அன்று பெற்றோர் குறித்து உயர்வாக பேசி விட்டு, இன்று அந்த பெற்றோருக்கு எதிராகவே பேசி, முரணாக நடந்து கொள்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications