அஜித் அகர்கர் விலகியதும் ஜடேஜா போட்ட ஒற்றைப் பதிவு.. மூத்த வீரர்களின் குமுறல் அம்பலம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து அஜித் அகர்கர் விலகிய சில மணி நேரங்களிலேயே, நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட 3 வார்த்தை பதிவு சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேர்வுக்குழுவில் காலியாக உள்ள இடத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்தப் பதிவின் கீழே பதிலளித்த ரவீந்திர ஜடேஜா, "இதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை என்ன?" என்று சிரிக்கும் எமோஜியுடன் நக்கலாகக் கேள்வி எழுப்பினார். அஜித் அகர்கருக்கும் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கடுமையான பனிப்போரையே ஜடேஜாவின் இந்த பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தேர்வுக் குழு தலைவராகப் பொறுப்பேற்றது முதலே, அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு இளம் வீரர்களை மட்டுமே முன்னிறுத்த வேண்டும் என்பதில் அகர்கர் பிடிவாதமாக இருந்தார். கடந்த 2022 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோரை அணியிலிருந்து நீக்க அவர் திட்டமிட்டார். எனினும் மூத்த வீரர்கள் 2024 டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துவிட்டு விடைபெற்றனர்.
அடுத்து டெஸ்ட் அணியில் இருந்து அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். அதன் பின்னணியில் தேர்வுக் குழுவின் அழுத்தம் இருந்ததாக கூறப்பட்டது. அப்போது மூத்த வீரர்களில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஓய்வை அறிவிக்கவில்லை.
அதன்பின்னரும் ஒருநாள் கிரிக்கெட்டில் 2024 இலங்கை தொடர் மற்றும் 2025 ஆஸ்திரேலிய தொடர்களில் ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்காமல் ஓய்வு என்ற பெயரில் அகர்கர் கழற்றிவிட்டார். "நான் விளையாட ஆர்வமாகவே உள்ளேன், ஆனால் தேர்வு செய்யாததற்கு தேர்வுக்குழுவிடம் தான் காரணம் கேட்க வேண்டும்" என்று ஜடேஜாவே முன்னர் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமாரைப் போலவே ஜடேஜாவும் அகர்கரின் பிடிவாதத்தால் பாதிக்கப்பட்டார். தற்போது அகர்கர் வெளியேறியுள்ள நிலையில், ஜடேஜா வெளியிட்டுள்ள இந்த பதிவு மூத்த வீரர்கள் மத்தியில் இருந்த நீண்ட நாள் குமுறலைத் தெளிவாகக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications


