ஷாக் கொடுத்த ஜடேஜா... நெருக்கடியில் இந்திய அணி... என்ன நடக்க போகிறது 2வது டெஸ்டில்!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள டெஸ்ட் மற்றும் இதர போட்டிகளில் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா பங்குபெறுவாரா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே இந்திய வீரர்களால் சமாளிக்க முடியவில்லை.
இந்திய அணி முதல் டெஸ்டில் தடுமாறிய போது நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா அனைவராலும் மிஸ் செய்யப்பட்டார். அவர் அணியில் இடம் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

காரணம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு இடது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் 6 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பிசிசிஐ அறிவித்தது.

மீளவில்லை
இந்நிலையில் ஜடேஜா இன்னும் காயத்தில் இருந்து மீளாததால் மீதமுள்ள 3 மற்றும் 4 வது டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதே போல் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் அவரின் பங்கேற்பு இருக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.

நெருக்கடியில் இந்தியா
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவிய நிலையில் தொடரில் முன்னிலை பெறவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டியில் நுழையவும் இந்திய அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.

மீளுமா இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஜடேஜாவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் பவுலிங்கில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் சோபிக்க தவறிவிட்டார். இதனால் ஆல்ரவுண்டர்களில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications